கும்மிடிப்பூண்டி பேரூராட்சியில் வாக்குப்பதிவு எந்திரத்தில் சின்னம் பொருத்தும் பணி


கும்மிடிப்பூண்டி பேரூராட்சியில் வாக்குப்பதிவு எந்திரத்தில் சின்னம் பொருத்தும் பணி
x
தினத்தந்தி 14 Feb 2022 6:21 AM IST (Updated: 14 Feb 2022 6:21 AM IST)
t-max-icont-min-icon

மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் வேட்பாளர்கள் பெயர் மற்றும் சின்னம் பொருத்தும் பணி நேற்று நடைபெற்றது. இதற்கு அரசியல் கட்சியினர் அதிக அளவில் வராததால் பேரூராட்சி அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டது.

கும்மிடிப்பூண்டி,

திருவள்ளூர் மாவட்டத்தில் வருகிற 19-ந் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை வருகிற 22-ந் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கு இன்னும் ஒரு வாரமே உள்ளதால் அரசியல் கட்சியினர் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் வாக்குப்பதிவு எந்திரத்தில் வேட்பாளர்களின் பெயர், சின்னம் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது.

கும்மிடிப்பூண்டி பேரூராட்சியில் 22 வாக்குச்சாவடிகளில் 22 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளது. இங்கு உள்ள 15 வார்டு பதவிகளுக்காக அரசியல் கட்சியினர் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் உள்பட 77 பேர் போட்டியிடுகின்றனர்.இந்த நிலையில், நேற்று தேர்தல் நடத்தும் அலுவலரும், பேரூராட்சி செயல் அலுவலருமான யமுனா மேற்பார்வையில் வேட்பாளர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் வேட்பாளர்கள் பெயர் மற்றும் சின்னம் போன்ற விவரங்களை பொருத்தி சீல் வைக்கும் பணி நடைபெற்றது.

இந்த பணியை நேரில் காண அழைக்கப்பட்டும் பெரும்பான்மையான வேட்பாளர்கள் மற்றும் அவர்களது பிரதிநிதிகள் யாரும் அதிக அளவில் பங்கேற்க ஆர்வம் காட்டவில்லை. இதனால் கும்மிடிப்பூண்டி பேரூராட்சி அலுவலகம் முழுமையாக வெறிச்சோடி காணப்பட்டது. இந்த பணியினை தேர்தல் அதிகாரிகள் தன்னிச்சையாக மேற்கொண்டனர். நேற்று விடுமுறை என்பதால் வேட்பாளர்கள் ஓட்டு கேட்பதில் அதிக ஆர்வம் காட்டியதால் இந்த பணி வெறிச்சோடியதாக தெரிகிறது.

ஆரணி பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளது. இந்த பேரூராட்சியில் மொத்தம் 11 ஆயிரத்து 214 வாக்காளர்கள் உள்ளனர். இங்கு 5 பள்ளிகளில் 15 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் சின்னங்களை வாக்கு எந்திரங்களில் பதிக்கும் பணி பேரூராட்சி வளாகத்தில் நடைபெற்றது.

இந்த பணி வட்டார தேர்தல் பார்வையாளர் நந்தினி முன்னிலையில் தேர்தல் நடத்தும் அலுவலர் கலாதரன் தலைமையில், மண்டல அலுவலர்கள் சிவக்குமார், திருக்குமரன், உதவித் தேர்தல் அலுவலர்கள் நித்தியானந்தம், தர்மலட்சுமி ஆகியோர் வேட்பாளர்களின் முன்னிலையில் பணியை மேற்கொண்டனர்.

ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் உள்ள 14 வார்டுகளில் 59 பேர் போட்டியிடுகின்றனர். இவர்களது பெயர் மற்றும் சின்னம் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் பொருத்தும் பணி நேற்று நடைபெற்றது. தேர்தல் அலுவலர் மாலா, உதவி தேர்தல் அலுவலர்கள் நடராஜன், வெங்கடேசன், பாண்டியன் ஆகியோரது முன்னிலையில் ஆயுதம் ஏந்திய போலீசார் பாதுகாப்புடன் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் வேட்பாளரின் பெயர், சின்னம் பொருத்தப்பட்டது.

Next Story