திருப்போரூர் முருகன் கோவிலில் தேர்த்திருவிழா - திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்


திருப்போரூர் முருகன் கோவிலில் தேர்த்திருவிழா - திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்
x
தினத்தந்தி 14 Feb 2022 6:32 AM IST (Updated: 14 Feb 2022 6:32 AM IST)
t-max-icont-min-icon

திருப்போரூர் முருகன் கோவிலில் தேர்த்திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து இழுத்தனர்.

திருப்போரூர்,

திருப்போரூரில் புகழ்பெற்ற முருகன் கோவில் பிரமோற்சவ விழா கடந்த 7-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனையொட்டி கணபதி ஹோமம், ஆறாம் கால பூஜை, அபிஷேக ஆராதனை போன்றவை நடைபெற்றது.

இதைத்தொடர்ந்து, கிளி வாகனம், பூத வாகனம், வெள்ளி அன்ன வாகனம், வெள்ளி மயில் வாகனம், தங்கமயில் வாகனம்,பஞ்சமூர்த்தி புறப்பாடு, யானை வாகனம் உள்ளிட்ட வாகனங்களில் எழுந்தருளிய முருகப்பெருமான் நான்கு மாடவீதிகளில் வீதி உலா வந்தார்.

இந்த நிலையில், பிரமோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று காலை 10.30 மணியளவில் தொடங்கியது.

காலை முருகப்பெருமானுக்கு சிறப்பு பூஜை தீப ஆராதனை நடைபெற்றது. பின்னர் முருகப்பெருமான் வள்ளி தெய்வனையுடன் நான்கு மாடவீதிகள் ஊர்வலமாக தேரில் பவனி வந்தார். தேர்த்திருவிழாவில் கலந்து கொண்ட ஏராளமான பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்து சென்றனர். விழாவையொட்டி, நான்கு மாடவீதிகள் வழியெங்கும் பக்தர்களுக்கு நீர், மோர் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

இதையொட்டி, வருகிற 16-ந் தேதி (புதன் கிழமை) தீர்த்தவாரியும், தெப்பத்திருவிழாவும் நடைபெறுகிறது.

19-ந்தேதி திருக்கல்யாணம் நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை செங்கல்பட்டு தக்காரும், உதவிஆணையருமான முத்து ரத்தினவேலு, கோவில் செயல் அலுவலர் சக்திவேல், கோவில் மேலாளர் வெற்றிவேல் மற்றும் விழாக்குழுவினர் செய்தனர்.

தேர்திருவிழாவில் கூட்ட நெரிசலால் பக்தர்களின் பாதுகாப்பு கருதி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்தன் தலைமையில் மாமல்லபுரம் துணை போலீஸ்சூப்பிரண்டு மற்றும் திருப்போரூர் இன்ஸ்பெக்டர் லல்லி ஏற்பாட்டில் 300-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மாலை 4 மணியளவில் தேர் நிலையை அடைந்தது.

Next Story