‘தினத்தந்தி’ புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
‘தினத்தந்தி‘ புகார் பெட்டிக்கு 99626 78888 என்ற ‘வாட்ஸ்-அப்‘ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
மின் வாரியம் உடனடி நடவடிக்கை
சென்னை ரெட்ஹில்ஸ் அடுத்த கிராண்ட்லையன், கட்டபொம்மன் தெருவில் உள்ள ஒரு மின்கம்பம் பழுதடைந்து ஆபத்தான நிலையில் இருப்பது குறித்த செய்தி ‘தினத்தந்தி' புகார் பெட்டியில் வெளியானது. இதையடுத்து மின்சார வாரியத்தின் துரித நடவடிக்கையால் அந்த பகுதியில் புதிய மின்கம்பம் பொருத்தப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் மின்சார வாரியத்துக்கும், தினத்தந்திக்கும் நன்றி தெரிவித்துள்ளனர்.
சாலை சீரமைக்கப்படுமா?
சென்னை குரோம்பேட்டையில் ஜமீன் ராயப்பேட்டை படவேட்டம்மன் (வார்டு 23) கோவிலில் இருந்து போஸ்டல் நகர் வரை உள்ள மெயின் ரோடு மிகவும் மோசமான நிலையில் குண்டும் குழியுமாக இருக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமத்துக்கு ஆளாகிறார்கள். எனவே சாலையை சீரமைக்க மாநகராட்சி விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- போஸ்டல் நகர் குடியிருப்போர் நலவாழ்வு சங்கம்.
நடைபாதையில் இடையூறு
சென்னை சாந்தோமில் ரோசரி மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. அதன் நுழைவாயில் அ௫கே சாலையில் மரம் ஒன்று நீண்ட நாட்களாக அகற்றப்படாமல் கிடக்கிறது. இதனால் தினமும் பள்ளி செல்லும் மாணவ-மாணவிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். இந்த மரத்தை அகற்ற தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- பொதுமக்கள்.
இரவு நேரத்தில் பஸ் வசதி தேவை
சென்னை ஆதம்பாக்கம் என்.ஜி.ஓ. காலனியில் இருந்து மேடவாக்கம் கூட் சாலை வரை கடந்த 2 ஆண்டுகளாக இரவு 8.30 மணிக்கு மேல் பஸ் வசதி இல்லை. இதனால் இரவு நேரங்களில் பெண்கள், சிறுவர்கள் உட்பட அனைவரும் ஷேர்-ஆட்டோக்களை மட்டுமே பயன்படுத்தி வருகின்றனர். எனவே இரவு 8.30 மணிக்கு மேல் குறிப்பிட்ட நேரம் வரை மேற்கண்ட வழிதடத்தில் பஸ்களை இயக்க வேண்டும்.
- ரகு, நங்கநல்லூர்.
குப்பை கழிவுகள் அகற்றப்படுமா?
சென்னை ரெட்ஹில்ஸ் புழல் நீர்தேக்கி அணையில் இருந்து மார்க்கெட்டுக்கு போகும் வழியில் குப்பை கழிவுகள் பெருமளவில் கொட்டப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. கால்நடைகளும் அதிகம் வலம் வருவதால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுகிறது. இது தொடர்பாக மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- ரமேஷ், அம்பத்தூர்.
கால்வாய் சீரமைக்கப்படுமா?
சென்னை ஜெ.ஜெ.நகர் கிழக்கு மாநகராட்சிக்குட்பட்ட நடுநிலைப்பள்ளியின் வெளிப்புற சுவரை ஒட்டி கால்வாய் ஓடுகிறது. இந்த கால்வாயில் நீண்ட நாட்களாக குப்பைகள் கொட்டப்பட்டு வருகின்றன. இதனால் சுற்றுச்சூழல் பாதிப்பும் சுகாதார சீர்கேடும் ஏற்பட அதிக அளவில் வாய்ப்பு உள்ளது. இந்த பகுதியில் முதியோர், குழந்தைகள், பள்ளி மாணவர்கள் என அதிக அளவில் வசித்து வருகின்றனர். எனவே பொதுப்பணித்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- சரத்குமார்.வே, சமூக பாதுகாவலன்.
பொது கழிப்பறையின் அலங்கோலம்
காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள வட்டாட்சியர் அலுவலகம் கடந்த ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. இதில் பொதுமக்கள் வசதிக்காக கழிப்பறை கட்டப்பட்டது. இந்த கழிப்பறை தற்போது தகுந்த பராமரிப்பு இன்றி பயன்படுத்த முடியாத வகையில் அலங்கோலமாக காட்சியளிக்கிறது. சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
- பொதுமக்கள்.
வாகன ஓட்டிகள் தவிப்பு
சென்னை புளியந்தோப்பில் உள்ள ஆட்டுத்தொட்டி பகுதியில் இருந்து வியாசர்பாடி நோக்கி செல்லும் பெரம்பூர் பேரக்ஸ் சாலை (ஹவுசிங் போர்டு அருகே) குண்டும் குழியுமாக படுமோசமாக காட்சி தருகிறது. வாகன ஓட்டிகள் தினந்தோறும் அவதியுறுவது தொடர்கதையாகி வருகிறது. இந்த சாலை சீரமைக்கப்படுமா?
- ஏ.முகமது இஸ்மாயில், ஆட்டுத்தொட்டி.
ஆரம்ப சுகாதார நிலையம் வேண்டும்
செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் வட்டம், வெடால் காலனி பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் இல்லை. இதனால் நோய்கள் பரவும் கால கட்டங்களில் மக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே வெடால் காலனி பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைத்து தர வேண்டும்.
- வெடால் காலனி மக்கள்.
நடவடிக்கை எடுக்க வேண்டும்
திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காடு நகராட்சி பஸ் நிலையம் அருகில் மழைநீர் வடிகால்வாய்க்காக தோண்டப்பட்டிருக்கும் பள்ளத்தில் உயர் மின்னழுத்த கேபிள்கள் திறந்த வெளியில் ஆபத்தான நிலையில் உள்ளது. இந்த பள்ளம் அருகில் நடந்து செல்லும் சிறுவர்கள் மற்றும் முதியோர் தவறி விழும் அபாயம் உள்ளது. கால்வாய் பணியை விரைவில் முடிக்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- சுமதி, சமூக ஆர்வலர்.
Related Tags :
Next Story