மூதாட்டியை அரிவாளால் வெட்டி நகை பணம் கொள்ளை
மூதாட்டியை அரிவாளால் வெட்டி நகை பணம் கொள்ளை
திருப்பூரில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை அரிவாளால் வெட்டி நகை, பணத்தை கொள்ளையடித்த மர்ம ஆசாமியை போலீசார் தேடி வருகிறார்கள்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது
மூதாட்டிக்கு அரிவாள் வெட்டு
திருப்பூர் எம்.ஜி. புதூர் 5வது வீதியைச் சேர்ந்தவர் நாகமணி வயது 75. இவருக்கு சொந்தமாக அப்பகுதியில் 4 வீடுகள் உள்ளன. 3 வீடுகளை வாடகைக்கு விட்டு ஒரு வீட்டில் அவர் தனியாக வசித்து வருகிறார். இவருக்கு சர்க்கரை நோய் இருப்பதால் ஒரு கால் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது.
அவருக்கு அருகில் உள்ள உறவினர்கள் தினமும் உணவு கொடுத்து வருவது வழக்கம். நேற்று காலை உறவினர்கள் சாப்பாடு கொடுப்பதற்காக நாகமணியின் அறைக்கு சென்றனர். அப்போது கட்டிலில் இருந்து கீழே நாகமணி கிடந்துள்ளார். வாயில் துணி வைத்து திணிக்கப்பட்டிருந்தது. கைகளில் அரிவாள் வெட்டுக்காயங்கள் இருந்தன.
நகை, பணம் கொள்ளை
இதுகுறித்து உடனடியாக திருப்பூர் தெற்கு போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. துணை கமிஷனர் ரவி, உதவி கமிஷனர் வரதராஜன், தெற்கு இன்ஸ்பெக்டர் பிச்சையா மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
இதில் நள்ளிரவில் வந்த மர்ம ஆசாமி, மின் விளக்கை அணைத்துவிட்டு, வாயில் துணியை திணித்து நாகமணியை அரிவாளால் கைகளில் வெட்டி அவர் அணிந்திருந்த அரை பவுன் கம்மல், பீரோவில் இருந்த ரூ.7 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது.
நாகமணியை திருப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகிறார்கள். மேலும் அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளையும் கைப்பற்றி போலீசார் விசாரிக்கிறார்கள். கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு தடயங்களை போலீசார் சேகரித்தனர். மூதாட்டி தனியாக இருப்பதை தெரிந்த நபர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. இதுகுறித்து தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பரபரப்பு
குடியிருப்பு நிறைந்த பகுதியில் தனியாக இருந்த மூதாட்டியை அரிவாளால் வெட்டி நகை, பணத்தை மர்ம ஆசாமி கொள்ளையடித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story