ஆன்லைன் மூலம் ரோஜாப்பூக்கள் விற்பனை அதிகரிப்பு


ஆன்லைன் மூலம் ரோஜாப்பூக்கள்  விற்பனை அதிகரிப்பு
x
தினத்தந்தி 14 Feb 2022 7:42 PM IST (Updated: 14 Feb 2022 7:42 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாவட்டத்தில் காதலர் தினத்தை முன்னிட்டு ஆன்லைன் மூலம் ரோஜாப்பூக்கள் விற்பனை அதிகரித்து உள்ளது

தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் காதலர் தினத்தை முன்னிட்டு ஆன்லைன் மூலம் ரோஜாப்பூக்கள் விற்பனை அதிகரித்து உள்ளது. ஏராளமானோர் கேக்குடன் சேர்த்து ரோஜா பூக்களுக்கும் ஆர்டர் கொடுத்து வாங்கினர்.
காதலர் தினம்
ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் 14-ந் தேதி இளைஞர்கள் மனதில் இனம்புரியாத சந்தோசத்தையும், எதிர்பார்ப்பையும் உருவாக்கும் நாளாக காதலர் தினம் அமைந்து உள்ளது. இந்த நாளில் பெரும்பாலானவர்கள் தங்களுக்கு பிடித்தமானவர்களுக்கு ரோஜாப்பூக்களை பரிசாக வழங்கி மகிழ்ந்து வருகின்றனர். இதனால் ஆண்டு தோறும் இந்த நாளில் ஏராளமான ரோஜாப்பூக்கள் விற்பனையாகி வருகின்றன.
ரோஜா பூ
அதன்படி இந்த ஆண்டும் தூத்துக்குடி மார்க்கெட்டுக்கு அதிக அளவில் விற்பனைக்காக பூக்கள் குவித்து வைக்கப்பட்டன. ஊட்டி, கொடைக்கானல் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து வண்ண வண்ண ரோஜாக்கள் விற்பனைக்கு வந்தன. இதே போன்று ஜெரிபுரா, கிசாந்தம், கார்னியம் போன்ற பூக்களும் விற்பனைக்கு வைக்கப்பட்டு இருந்தன. இந்த பூக்களால் தயாரிக்கப்பட்ட பூங்கொத்து (பொக்கே) யும் விற்பனை நடந்தது. வழக்கமாக மக்கள் நேரில் வந்து பூக்களை வாங்கி செல்வார்கள்.
ஆன்லைன்
ஆனால் நேற்று காதலர் தினத்தை முன்னிட்டு தூத்துக்குடியில் பூக்கள் விற்பனையில் ஆன்லைன் முக்கிய இடத்தை பிடித்து உள்ளது. பூவியாபாரிகள் கேக் தயாரிக்கும் கடைகளுடன் இணைப்பில் உள்ளனர். 
இதனால் ஆன்லைன் மூலம் கேக் ஆர்டர் கொடுத்த பல இளைஞர்கள், பூங்கொத்துக்கும் ஆர்டர் கொடுத்து வாங்கி உள்ளனர். ஒரு பூங்கொத்து ரூ.200 முதல் ரூ.2 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டது. இதனை அதிக அளவில் ஆன்லைன் மூலம் வாங்கினர்.
இது குறித்து பூ வியாபாரி ஒருவர் கூறும் போது, காதலர் தினத்தை முன்னிட்டு ஏராளமான ரோஜாப்பூக்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டு உள்ளன. இதனை மக்கள் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர். அதே போன்று ஆன்லைன் மூலமும் அதிக அளவில் பூக்களை வாங்கி உள்ளனர் என்று கூறினார்.

Next Story