தி.மு.க.வுக்கு பாடம் புகட்ட மக்கள் முடிவெடுத்து விட்டனர்:ஓ.பன்னீர்செல்வம்
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுகவுக்கு சரியான பாடம் புகட்ட மக்கள் முடிவெடுத்து விட்டனர் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் கூறினார்
தூத்துக்குடி:
“நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க.வுக்கு சரியான பாடம் புகட்ட மக்கள் முடிவெடுத்து விட்டனர்” என்று அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
ஆலோசனை கூட்டம்
தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட 60 வார்டுகளில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் மற்றும் நகராட்சிகள், பேரூராட்சிகளில் போட்டியிடும் அ.தி.மு.க வேட்பாளர்கள் அறிமுகம் மற்றும் ஆலோசனை கூட்டம் தூத்துக்குடியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று மாலை நடந்தது. இந்த கூட்டத்துக்கு தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன், வடக்கு மாவட்ட செயலாளர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. ஆகியோர் தலைமை தாங்கினர். சிறப்பு அழைப்பாளராக அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி துணைத்தலைவருமான ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். இந்த முப்பெரும் தலைவர்களின் அறிவு, ஆற்றல் ஆகியவற்றை ஒருங்கே பெற்ற ஒரே தலைவர் ஜெயலலிதா.
வாக்குறுதிகள்
அவர் ஒவ்வொரு தேர்தல் காலத்திலும் நாட்டு மக்கள் நலன் கருதி, நாட்டின் முன்னேற்றம் கருதி வாக்குறுதிகளை அறிவிப்பார். அறிவித்த அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றியவர் ஜெயலலிதா என்பது வரலாறு. அவர் நல்ல ஆட்சியாளராக இருந்ததால், 2.10 கோடி ரேஷன் கார்டுதாரர்களுக்கும் விலையில்லா அரிசி வழங்கினார். உறுதியான- தரமான வீடுகளை கட்டிக் கொடுத்தார்.
100 யூனிட் இலவச மின்சாரம், பெண்களுக்கு இடஒதுக்கீடு, ஸ்கூட்டி வழங்குதல், இலவச மிக்சி-கிரைண்டர், திருமண நிதியுதவி போன்ற அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றி தந்தார்.
அதிருப்தி
10 ஆண்டுகள் யாரும் குறை சொல்ல முடியாத ஆட்சி நடந்தது. அதன்பிறகு தி.மு.க. 505 பொய் வாக்குறுதிகளை அளித்து ஆட்சிக்கு வந்து விட்டது. அவர்கள் அளித்த வாக்குறுதிகளான நீட் தேர்வு ரத்து, கல்விக்கடன் ரத்து, நகைக்கடன் ரத்து, தேசிய ஊரக வேலைஉறுதி திட்டத்தில் வேலை நாட்களை 150 நாட்களாக அதிகரிப்பது, குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 போன்ற வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. தரமற்ற பொங்கல் பரிசு வழங்கினார்கள். அதையும் வெளிமாநிலங்களில் இருந்து கொள்முதல் செய்தனர். இப்படி ஒரு ஆட்சி நடந்து கொண்டு இருக்கிறது.
அ.தி.மு.க ஆட்சியில் போட்ட திட்டங்கள்தான் தற்போது நடந்து கொண்டு இருக்கிறது. நிர்வாகத்திறமை இல்லாத ஆட்சி நடக்கிறது. ஆட்சிக்கு வந்து 10 மாதத்தில் மக்கள் விரோத அரசு என்று மக்களின் அதிருப்தியை பெற்ற அரசு, தி.மு.க. அரசுதான்.
பாடம் புகட்ட முடிவு
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க.வுக்கு சரியான பாடம் புகட்ட வேண்டும் என்று மக்கள் முடிவெடுத்து விட்டனர். தூத்துக்குடியில் 100-க்கு 100 சதவீதம் வெற்றி. அனைத்து இடங்களிலும் வெற்றி என்பது வரலாறாக போகிறது. தற்போது அ.தி.மு.க.வுக்கு சாதகமான சூழ்நிலை ஏற்பட்டு இருக்கிறது.
இது தொண்டர்களின் தேர்தல். அவர்கள் உழைப்பு காரணமாகத்தான் தமிழகத்தை 30 ஆண்டுகாலம் ஆளும் உரிமையை பெற்றோம். ஆகையால் தொண்டர்கள் போட்டியிடும் இந்த தேர்தலில் இழந்த பெருமையை மீண்டும் பெற நாம் அனைவரும் ஒன்றுபட்டு ஒற்றுமையாக உழைக்க வேண்டும். யார் ஆட்சி இருந்தால் நாட்டு மக்கள் சுபிட்சமாக இருக்க முடியும் என்பதை மக்கள் அறிவார்கள். முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஆட்சிதான் சிறந்த ஆட்சி என்று மக்கள் முடிவெடுத்து விட்டனர். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அனைவரும் இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச்செய்யுங்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
கலந்து கொண்டவர்கள்
கூட்டத்தில் மாநில அமைப்பு செயலாளர் என்.சின்னத்துரை, மாநில அமைப்புசாரா ஓட்டுநர் அணி செயலாளர் பெருமாள்சாமி, முன்னாள் நகரசபை தலைவர் ஹென்றி, மாவட்ட பஞ்சாயத்து தலைவர் சத்யா, த.மா.கா. வடக்கு மாவட்ட தலைவர் கதிர்வேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story