வேடசந்தூர் அரசு மருத்துவமனை பெண்கள் வார்டுக்குள் பாம்பு புகுந்தது டாக்டர்கள், நோயாளிகள் அலறியடித்து ஓட்டம்
வேடசந்தூர் அரசு மருத்துவமனை பெண்கள் வார்டுக்குள் பாம்பு புகுந்தது. இதனால் டாக்டர்கள், நோயாளிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
வேடசந்தூர்:
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் அரசு மருத்துவமனை உள்ளது. இங்குள்ள பெண்கள் வார்டில் நேற்று மதியம் சுமார் 6 அடி நீளமுள்ள பாம்பு ஒன்று புகுந்தது. இதனால் படுக்கையில் சிகிச்சையில் இருந்த 10-க்கும் மேற்பட்ட பெண் நோயாளிகள் அய்யோ... பாம்பு...பாம்பு என்று சத்தம் போட்டுக்கொண்டே தலைதெறிக்க மருத்துவமனையில் இருந்து வெளியே ஓட்டம் பிடித்தனர்.
இதை பார்த்து டாக்டர்களும், நர்சுகளும் அலறியடித்தவாறு பதற்றத்துடன் மருத்துவமனையை விட்டு வெளியே ஓடி வந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் வீரர்கள் விரைந்து வந்து பாம்பை பிடிக்க முயன்றனர். அப்போது அந்த பாம்பு நோயாளிகளின் படுக்கையின் கீழ் மாறிமாறி சென்று போக்கு காட்டியது. இதையடுத்து சுமார் ஒரு மணி நேர வேட்டைக்கு பிறகு தீயணைப்பு வீரர்கள் உயிரோடு அந்த பாம்பை பிடித்தனர். இது சாரைப்பாம்பு வகையாகும். பின்னர் அந்த பாம்பு வனத்துறையினர் மூலம் வனப்பகுதியில் விடப்பட்டது.
Related Tags :
Next Story