திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரியில் முதன்முறையாக மாணவ-மாணவிகளுக்கு வகுப்புகள் தொடக்கம்
திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரியில் முதன்முறையாக மாணவ-மாணவிகளுக்கு வகுப்புகள் தொடங்கப்பட்டன.
முருகபவனம்:
திண்டுக்கல்லை அடுத்த அடியனூத்து ஒடுக்கம் பகுதியில் அரசு மருத்துவ கல்லூரி ரூ.327 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு உள்ளது. இந்த கல்லூரியில் மாணவ- மாணவிகளுக்கான வகுப்பறைகள், தங்கும் விடுதிகள், கூட்ட அரங்கு, அலுவலகம், டீன் இல்ல கட்டிடம் ஆகியவை கட்டப்பட்டுள்ளன.
இந்த கல்லூரியை பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் கடந்த மாதம் திறந்து வைத்தார். இந்த கல்லூரியில் 150 மருத்துவ மாணவர்களுக்கான இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
அதன்படி மருத்துவ மாணவ-மாணவிகள் சேர்க்கைக்கான கவுன்சிலிங்கில் திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரியை தேர்வு செய்தவர்கள் இங்கு வந்து சேர தொடங்கி உள்ளனர். இதையடுத்து நேற்று மாணவர்களின் சான்றிதழ், விவரங்கள் சரிபார்க்கப்பட்டு சேர்க்கை நடைபெற்றது. மேலும் அவர்களுக்கு கொரோனா உள்பட முழு உடல் பரிசோதனை செய்யப்பட்டது.
வகுப்புகள் தொடக்கம்
இதுகுறித்து திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் விஜயகுமார் கூறுகையில், தேசிய மருத்துவ குழுமத்தின் அறிவுறுத்தல் படி, மருத்துவ கல்லூரியில் சேர்ந்த மாணவ-மாணவிகளுக்கு இன்று(அதாவது நேற்று) முதல் வகுப்புகள் தொடங்கி உள்ளது. இந்த கல்லூரியில் இதுவரை மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பிரிவின் அடிப்படையில் 2 பேரும், இந்திய அளவிலான இட ஒதுக்கீட்டில் 7 பேரும், 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டில் 10 பேரும், அரசு ஒதுக்கீட்டில் 74 பேரும் சேர்த்து ஆக மொத்தம் 93 மாணவ-மாணவிகள் சேர்ந்துள்ளனர். மீதம் உள்ள 57 இடங்களில் சேர நாளை (புதன்கிழமை) மாலை 5 மணி வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது என்றார். கல்லூரி தொடங்கப்பட்டு நேற்று முதன்முறையாக வகுப்புகள் நடந்தது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story