காதலர் தினத்தையொட்டி சுற்றுலா இடம், பூங்காக்களில் குவிந்த காதலர்கள் பூங்கொத்து கொடுத்து அன்பை பரிமாறிக்கொண்டனர்
காதலர் தினத்தையொட்டி நேற்று கொடைக்கானல், திண்டுக்கல்லில் உள்ள சுற்றுலா இடங்கள், பூங்காக்களில் காதலர்கள் குவிந்தனர்.
கொடைக்கானல்:
உலகம் முழுவதும் நேற்று காதலர் தினம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி காதலர்கள் தங்களது அன்பை வெளிப்படுத்தும் விதமாக பல்வேறு பரிசு பொருட்களை வழங்கியும், வாழ்த்துகளை தெரிவித்தும் கொண்டாடினர். இதனால் சுற்றுலா இடங்கள், பூங்காக்களில் காதலர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.
‘மலைகளின் இளவரசி’ யான கொடைக்கானலுக்கு தினசரி ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருவார்கள். இந்தநிலையில் காதலர் தினத்தை முன்னிட்டு நேற்று முன்தினமே ஏராளமான காதலர்கள் கொடைக்கானலில் குவிந்தனர். இதற்கிடையே நேற்று இளம் காதலர்கள், காதல் திருமணம் செய்த தம்பதிகள் என பலரும் நகரில் உள்ள முக்கிய சுற்றுலா இடங்களில் குவிந்தனர்.
பூங்கொத்து கொடுத்து...
ஏரிச்சாலை, பிரையண்ட் பூங்கா, ரோஜா பூங்கா, பைன்மரக்காடு, மோயர் பாயிண்ட், பில்லர்ராக், டால்பின் நோஸ் உள்ளிட்ட சுற்றுலா இடங்களில் காதலர்கள் திரண்டனர். நகரின் அழகை கண்டு ரசித்த அவர்கள், ஜோடியாக தங்களது செல்போனில் ‘செல்பி’ எடுத்தும், கேமராவில் புகைப்படங்கள் எடுத்தும் மகிழ்ந்தனர். மேலும் காதலர்கள் ஒருவருக்கொருவர் பூங்கொத்து கொடுத்தும், பரிசு பொருட்கள் வழங்கியும் அன்பை பரிமாறிக்கொண்டனர். இதேபோல் திண்டுக்கல்லில் உள்ள பூங்காக்களிலும் காதலர்கள் குவிந்தனர். குறிப்பாக திண்டுக்கல் குமரன் பூங்காவில் காதலர்கள் ஏராளமானோர் வலம்வந்ததை காணமுடிந்தது.
Related Tags :
Next Story