விருத்தாசலத்தில் பரபரப்பு போலீஸ்காரர் வீட்டில் நகை, பணம் கொள்ளை மேலும் ஒரு வீட்டில் திருட்டு
விருத்தாசலத்தில் போலீஸ்காரர் வீட்டில் நகை,பணத்தை மர்ம மனிதர்கள் கொள்ளையடித்து சென்றுவிட்டனர். இதேபோல் அந்த பகுதியில் மேலும் ஒரு வீட்டிலும் திருட்டு சம்பவம் நடந்துள்ளது.
விருத்தாசலம்,
விருத்தாசலம் வடக்கு பெரியார் நகரில் உள்ள சுதாகர் நகரில் வசித்து வருபவர் ஆறுமுகம் (வயது 46). போலீஸ் ஏட்டான இவர், தற்போது திட்டக்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு முகாம் அலுவலகத்தில் எழுத்தராக பணிபுரிந்து வருகிறார்.
கடந்த 11-ந் தேதி சென்னையில் உள்ள உறவினர் வீட்டு சுபநிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தனது குடும்பத்துடன் சென்னைக்கு புறப்பட்டு சென்றார். பின்னர் அங்கிருந்து நேற்று முன்தினம் இரவு வீட்டுக்கு திரும்பினார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது.
கொள்ளை
இதையடுத்து ஆறுமுகம்உள்ளே சென்று பார்த்த போது, படுக்கை அறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த துணிகள் வெளியே சிதறி கிடந்தன. மேலும் அங்கிருந்த 4½ பவுன் நகை, ரூ. 3 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை காணவில்லை. மர்ம மனிதர்கள் நகை, பணத்தை கொள்ளையடித்து சென்று இருப்பது தெரியவந்தது .
இதுகுறித்து ஆறுமுகம் விருத்தாசலம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் உதவி போலீஸ் சூப்பிரண்டு அங்கித் ஜெயின், இன்ஸ்பெக்டர் விஜயரங்கன் மற்றும் போலீசார் விரைந்து சென்று சம்பவ இடத்தை பார்வையிட்டு, விசாரணை மேற்கொண்டனர். இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து மர்ம மனிதர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
மற்றொரு சம்பவம்
இதேபோல் அதே பகுதியில் உள்ள வீரன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ராஜாராம். இவர் வேளாண் விவசாய மண்டல ஆராய்ச்சி நிலையத்தில் பணி செய்து ஓய்வு பெற்றவர் ஆவார். இவரும் தனது குடும்பத்தினருடன் சென்னையில் உள்ள தனது மகனை பார்ப்பதற்காக சென்று விட்டு நேற்று முன்தினம் இரவு வீட்டுக்கு வந்தார்.
அப்போது அவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. வீ்ட்டில் இருந்த பீரோவும் திறந்து கிடந்து பொருட்கள் சிதறி கிடந்தன. ஆனால் அதில் நகை, பணம் ஏதும் இல்லாததால் ஏமாற்றமடைந்த கொள்ளையர்கள், வீட்டில் இருந்த ஒரு மடிக்கணினியை மட்டும் திருடி சென்றுவிட்டனர்.
இதுகுறித்த புகாான் பேரில் விருத்தாசலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
அடுத்தடுத்து நடந்த இந்த கொள்ளை சம்பவம் விருத்தாசலம் பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story