முதல் தேர்தலை சந்திக்க அரசியல் கட்சியினர் சுறு, சுறுப்பு: கடலூர் மாநகராட்சியை கைப்பற்றுவது யார்?
முதல் தேர்தலை சந்திக்கும் கடலூர் மாநகராட்சியை கைப்பற்றுவது யார்? என்கிற எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது.
கடலூா்,
இந்தியாவுக்கு வாணிபம் செய்ய வந்த ஆங்கிலேயர்கள் செஞ்சியை ஆண்ட மன்னர்களிடம் இருந்து கடலூரில் இருந்த புனித டேவிட் கோட்டையை வாங்கினார்கள். சென்னை புனித ஜார்ஜ் கோட்டையை பிரெஞ்சுகாரர்கள் கைப்பற்றிய போது, புனித டேவிட் கோட்டையை தங்கள் மாகாணத்தின் தலைநகராக மாற்றி ஆங்கிலேயர்கள் ஆண்டு வந்தனர்.
ஆங்கிலேயர்கள் தங்கள் நாட்டுடனான வாணிப தொடர்புகளுக்கு கடலூர் துறைமுகத்தை அதிக அளவில் பயன்படுத்தி வந்தனர். இதனால் அப்போது பெரும்பாலான அரசு அலுவலகங்கள் துறைமுகத்தில் இயங்கியது. அந்த வகையில் கடலூர் நகராட்சி 1866-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. வரலாற்று ஆய்வாளர்கள் கூற்றுப்படி இந்த பகுதியை சோழர், பல்லவர், முகாலயர் மற்றும் ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்துள்ளனர்.
1959-ம் ஆண்டு இந்த நகராட்சியில் 32 வார்டுகள் இருந்தது. அதன்பிறகு மக்கள் தொகை பெருக்கம் ஏற்பட்டதால் தற்போது 45 வார்டுகள் உள்ளது. இந்த நகராட்சி 9.3.1993 -ல் தேர்வு நிலை நகராட்சியாகவும், 2.12.2008 முதல் சிறப்பு நிலை நகராட்சியாகவும், பின்னர் பெருநகராட்சியாகவும் தரம் உயர்த்தப்பட்டது. பொதுமக்களின் கோரிக்கைக்கு பிறகு 21.10.2021 அன்று கடலூர் நகராட்சி, மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது.
27.69 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் மாநகராட்சி பகுதி அமைந்துள்ளது. இந்த மாநகராட்சியில் கடந்த 2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி 1 லட்சத்து 73 ஆயிரத்து 636 பேர் வசித்து வந்தனர். 2021-ம் ஆண்டு கணக்கெடுப்பின் படி 1 லட்சத்து 98 ஆயிரத்து 987 பேர் வசித்து வருகின்றனர். 49 ஆயிரத்து 515 வீடுகள் உள்ளன. 738 தெருக்கள் உள்ளன. இங்கு 7 சமுதாய கூடங்கள், ஒரு பஸ் நிலையம், 3 மார்க்கெட், 291 கிலோ மீட்டர் சாலைகள் உள்ளது. கடலூரில் இருந்து 200 கிலோ மீட்டர் தொலைவில் சென்னையும், 22 கிலோ மீட்டர் தொலைவில் புதுச்சேரி மாநிலமும் அமைந்துள்ளது.
கடலூர் பாடலீஸ்வரர் கோவில், வரதராஜபெருமாள் கோவில் உள்பட பல்வேறு கோவில்களும், பழமைவாய்ந்த துறைமுகம், திருப்பாதிரிப்புலியூர், முதுநகர் ரெயில் நிலையங்களும் மாநகரில் அமைந்துள்ளது.
மெரினா கடற்கரைக்கு அடுத்தபடியாக நீளமான கடற்கரையாக கடலூர் சில்வர் பீச் உள்ளது. மாநகரின் மையத்தில் கெடிலம், தென்பெண்ணையாறு ஓடி வங்கக்கடலில் சங்கமிக்கிறது.
கடலூர் மாநகராட்சியில் 68 ஆயிரத்து 205 ஆண் வாக்காளர்கள், 74 ஆயிரத்து 225 பெண் வாக்காளர்கள், 49 மூன்றாம் பாலினத்தவர் என 1 லட்சத்து 42 ஆயிரத்து 479 வாக்காளர்கள் உள்ளனர். கடலூர் மாநகராட்சியில் உள்ள 45 வார்டுகளில் 28, 33, 34 ஆகிய வார்டுகள் ஆதிதிராவிடர் பொது பிரிவினருக்கும், 4, 25, 36 வார்டுகள் ஆதிதிராவிடர் பெண்களுக்கும், 1, 2, 5, 6, 7, 8, 15, 17, 18, 19, 20, 21, 22, 26, 30, 31, 38, 42, 44, 45 ஆகிய வார்டுகள் பெண்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன. மற்ற வார்டுகள் பொதுவான வார்டுகளாக உள்ளன.
கடந்த நகராட்சி தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்று, நகரசபை தலைவராக சி.கே.சுப்பிரமணியன் பதவியில் இருந்தார். அவர் தனது பதவியை ராஜினாமா செய்ததால் கடந்த 2014-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரை குமரன் தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.
தற்போது மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு முதல் தேர்தலை சந்திக்கிறது. இந்த 45 வார்டுகளில் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க., காங்கிரஸ், பா.ம.க., அ.ம.மு.க., விடுதலை சிறுத்தைகள், மக்கள் நீதி மய்யம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் சார்பில் 286 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
இருப்பினும் தி.மு.க., அ.தி.மு.க. இடையே நேரடி போட்டி நிலவி வருகிறது. இதனால் மாநகராட்சியை கைப்பற்றப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. அதிலும் மாநகராட்சி மேயர் பெண்ணுக்கு ஒதுக்கப்பட்டு உள்ளது. இதனால் இந்த பெண் மேயர் பதவிக்கு கடும் போட்டி நிலவி வருகிறது. இதனால் தி.மு.க., அ.தி.மு.க. வேட்பாளர்கள் வரிந்து கட்டி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆனால் மாநகராட்சியில் தீர்க்கப்படாத பிரச்சினைகள் ஏராளம் உள்ளன. கடலூர் மாநகராட்சியில் சாலை பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளது. பாதாள சாக்கடை திட்டம் இன்னும் முழுமை பெறாமல் உள்ளது. இதனால் மாநகரில் ஆங்காங்கே சாக்கடை நீர் வழிந் தோடி வருகிறது.
அதேபோல் மாநகராட்சியில் உள்ள 45 வார்டுகளிலும் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. குப்பை கொட்ட ஏற்கனவே இருந்த 2 இடங்களும் மூடப்பட்ட நிலையில், தற்போது சேகரிக்கப்படும் குப்பைகள் தெரு எங்கும் சிதறி கிடக்கிறது.
குப்பைகளை எங்கே கொட்டுவது என்று தெரியாமல் அதிகாரிகள் திணறி வருகின்றனர். இடம் கிடைக்காமல் கெடிலம் ஆற்றங்கரையோரங்களிலும், தெருவோரங்களிலும் கொட்டி எரித்து வருகின்றனர். இதனால் மாநகரில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.
மாநகராட்சி என்பதால் பெரிய பஸ் நிலையம் அமைய வேண்டும். இதற்காக கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் கலெக்டர் அலுவலகம் அருகில் மேற்கு பகுதியில் அடிக்கல் நாட்டப்பட்டது. அதன்பிறகு எந்த பணிகளும் நடக்கவில்லை. தற்போதைய தி.மு.க. அரசும் புதிய பஸ் நிலையம் அமைக்கப்படும் என்று உறுதி அளித்துள்ளது. ஆனால் அதற்கான பணிகள் தேர்தல் முடிவடைந்ததும் தொடங்க வாய்ப்பு உள்ளது.
Related Tags :
Next Story