கடத்தூர் அருகே கிணற்றில் தவறி விழுந்து விவசாயி சாவு
கடத்தூர் அருகே கிணற்றில் தவறி விழுந்து விவசாயி இறந்தார்.
கடத்தூர்:
தர்மபுரி மாவட்டம் கடத்தூர் அருகே உள்ள ஆத்தூர் புதுப்பாலம் பகுதியை சேர்ந்தவர் வேடியப்பன் (வயது 45). விவசாயி. இவருக்கு திருமணமாகி சுகுணா என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். நேற்று முன்தினம் இரவு தனது நிலத்தில் உள்ள கிணறு அருகில் அமர்ந்து வேடியப்பன் மது அருந்தியுள்ளார். அப்போது மதுபோதையில் அவர் நிலைதடுமாறி கிணற்றில் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார். இந்தநிலையில் நேற்று காலை அவரது குடும்பத்தினர் தோட்டத்திற்கு சென்று பார்த்தபோது வேடியப்பன் கிணற்றில் பிணமாக மிதந்தது தெரியவந்தது. இதுகுறித்து பாப்பிரெட்டிப்பட்டி தீயணைப்பு நிலையத்திற்கும், கடத்தூர் போலீஸ் நிலையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் தீயணைப்புத்துறையினர் விரைந்து சென்று வேடியப்பனின் உடலை மீட்டு மேலே கொண்டு வந்தனர். பின்னர் அங்கு வந்த போலீசார், இறந்த வேடியப்பனின் உடலை பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story