கல்குவாரி அமைக்க எதிர்ப்பு தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் கிராம மக்கள் தர்ணா போராட்டம்


கல்குவாரி அமைக்க எதிர்ப்பு தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் கிராம மக்கள் தர்ணா போராட்டம்
x
தினத்தந்தி 14 Feb 2022 10:09 PM IST (Updated: 14 Feb 2022 10:09 PM IST)
t-max-icont-min-icon

இண்டூர் அருகே கல்குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் கிராம மக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தர்மபுரி:
இண்டூர் அருகே கல்குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் கிராம மக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தர்ணா போராட்டம்
தர்மபுரி மாவட்டம் இண்டூர் அருகே கும்பளப்பாடி அருகே உள்ள கரடிக்கல்குண்டு கொட்டாய் கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இந்தகிராமத்தையொட்டி பாறை குன்றுகள் அதிக அளவில் உள்ளன. இங்கு தனியார் கல்குவாரி அமைக்க பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த பகுதியை சேர்ந்த மக்கள் கடந்த சில நாட்கள் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதைத்தொடர்ந்து நேற்று கும்பளப்பாடி கிராம மக்கள் தர்மபுரி கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். அங்குள்ள நுழைவுவாயில் முன்பு அவர்கள் தரையில் அமர்ந்து கோரிக்கையை வலியுறுத்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
விவசாய நிலம் பாதிப்பு
இதுபற்றி தகவல் அறிந்த வருவாய்த்துறை அலுவலர்கள், போலீசார் விரைந்து வந்து கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கிராம மக்கள் கூறுகையில், கல்குவாரி மற்றும் கிரஷர் அமைக்க உள்ள இடத்தையொட்டி விவசாய நிலங்கள், ஆடு, மாடு மேயும் மேய்ச்சல் நிலம் மற்றும் குடியிருப்பு பகுதிகள் உள்ளன. இங்கு கல்குவாரி அமைக்கப்பட்டால் விவசாய நிலங்கள் பாதிப்புக்குள்ளாகும்.
நிலத்தடி நீர்மட்டம் குறையும் அபாயம் உள்ளது. இந்த பகுதியில் சுற்றுச்சூழலும் பாதிக்கப்படும். எனவே அங்கு கல்குவாரி அமைப்பதை தடுக்க துறை அதிகாரிகளிடம் மனு அளித்துள்ளோம். இதுதொடர்பாக ஒரு ஆய்வை நடத்தி எங்கள் வாழ்வாதாரத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர். இதுதொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story