424 வாக்குச்சாவடி மையங்களுக்கு கொரோனா தடுப்பு உபகரணங்கள் அனுப்பும் பணி-கலெக்டர் நேரில் ஆய்வு


424 வாக்குச்சாவடி மையங்களுக்கு கொரோனா தடுப்பு உபகரணங்கள் அனுப்பும் பணி-கலெக்டர் நேரில் ஆய்வு
x
தினத்தந்தி 14 Feb 2022 10:19 PM IST (Updated: 14 Feb 2022 10:19 PM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 424 வாக்குச்சாவடி மையங்களுக்கு கொரோனா தடுப்பு மருத்துவ உபகரணங்கள் அனுப்பும் பணியினை கலெக்டர் நேரில் ஆய்வு செய்தார்.

கிருஷ்ணகிரி:
கொரோனா தடுப்பு உபகரணங்கள்
கிருஷ்ணகிரி வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை வளாகத்தில் நேற்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு ஓசூர் மாநகராட்சி, கிருஷ்ணகிரி நகராட்சி மற்றும் 6 பேரூராட்சிகளில் உள்ள 424 வாக்குச்சாவடி மையங்களுக்கு கொரோனா நோய்தொற்று தடுப்பு மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் அனுப்பும் பணி நடந்தது. 
இதை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், கலெக்டருமான ஜெயசந்திரபானு ரெட்டி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:-
தடுப்பு நடவடிக்கைகள் 
மாநில தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் பேரில், வருகிற 19-ந் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு ஓசூர் மாநகராட்சியில் உள்ள 248 வாக்குச்சாவடி மையங்கள், கிருஷ்ணகிரி நகராட்சியில் 66 வாக்குச்சாவடி மையங்கள், பர்கூர் பேரூராட்சியில் 16 வாக்குச்சாவடி மையங்கள், தேன்கனிக்கோட்டை பேரூராட்சியில் 28 வாக்குச்சாவடி மையங்கள், காவேரிப்பட்டணம் மற்றும் ஊத்தங்கரை பேரூராட்சியில் தலா 18 வாக்குச்சாவடி மையங்கள், நாகோஜனஅள்ளி மற்றும் கெலமங்கலம் பேரூராட்சிகளில் தலா 15 வாக்குச்சாவடி மையங்கள் என மொத்தம் 424 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் 3 லட்சத்து 58 ஆயிரத்து 83 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். வாக்குச்சாவடி தலைமை நிலைய அலுவலர், வாக்குச்சாவடி அலுவலர்கள் (நிலை 1, நிலை 2 மற்றும் நிலை 3), முகவர்கள் ஆகியோர் பாதுகாப்புடன் பணியாற்றுவதை உறுதி செய்யும் வகையில் தெர்மல் ஸ்கேனர், முககவசங்கள், கிருமிநாசினி, கையுறை, பாதுகாப்பு கவச உடை உள்பட பல்வேறு கொரோனா தடுப்பு மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
முன்னேற்பாடு பணிகள் 
இவை அனைத்தும் அந்தந்த வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்பும் பணி நடந்து வருகிறது. அலுவலர்கள், பணியாளர்கள், முகவர்கள் என அனைவரும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை பாதுகாப்பான முறையில் நடத்த அனைத்து முன்னேற்பாடு பணிகளும் நடைபெற்று வருகின்றன.  இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார்.
இந்த ஆய்வின் போது சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் கோவிந்தன், தனி தாசில்தார் (பேரிடர் மேலாண்மை) ராமச்சந்திரன், டாக்டர் திலக் ஆகியோர் உடன் இருந்தனர்.

Next Story