கனிமவள அதிகாரிகளை கைது செய்ய லஞ்ச ஒழிப்புத்துறையினர் தீவிரம்
பெரியகுளம் அருகே அரசு நிலத்தை அபகரித்து கனிம வளங்கள் கொள்ளையடிக்கப்பட்டது தொடர்பான வழக்கில் கனிமவளத்துறை அதிகாரிகளை கைது செய்ய லஞ்ச ஒழிப்புத்துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
தேனி:
கனிம வளங்கள் கொள்ளை
தேனி மாவட்டம், பெரியகுளம் தாலுகாவுக்கு உட்பட்ட வடவீரநாயக்கன்பட்டி, தாமரைக்குளம், கெங்குவார்பட்டி ஆகிய இடங்களில் 182 ஏக்கர் அரசு நிலங்களை தனிநபர்கள் சிலர் அரசு அதிகாரிகள் துணையுடன் அபகரித்தனர். இதுதொடர்பாக தேனி சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே வடவீரநாயக்கன்பட்டியில் அபகரிக்கப்பட்ட 109 ஏக்கர் நிலங்களில் கனிம வளங்கள் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. சென்னையில் இருந்து கனிமவளத்துறை உயர் அதிகாரிகள் குழுவினர் நேரில் வந்து இந்த கனிமவள கொள்ளை குறித்து விசாரணை நடத்தினர். கனிம வளங்கள் கொள்ளையடிக்கப்பட்ட இடங்களை ஆய்வு செய்து கொள்ளைபோன கனிம வளங்கள் குறித்து மதிப்பீடு செய்யும் பணி நடந்தது. இதில் அரசு மதிப்பீட்டில் சுமார் ரூ.3 கோடி கனிமவளங்கள் கொள்ளைபோனது தெரியவந்தது. வெளிச்சந்தையில் இந்த கனிம வளங்கள் பல கோடி ரூபாய் மதிப்பு என கூறப்படுகிறது.
12 பேர் மீது வழக்கு
இந்த சம்பவம் குறித்து அரசுக்கு மாவட்ட கலெக்டர் முரளிதரன் ரகசிய அறிக்கை அளித்தார். அந்த அறிக்கையின் அடிப்படையில் விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்புத்துறைக்கு அரசு உத்தரவிட்டது. அதன்பேரில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். விசாரணையை தொடர்ந்து, இந்த சம்பவம் தொடர்பாக தேனி மாவட்டத்தில் கடந்த 2016-ம் ஆண்டில் இருந்து கடந்த ஆண்டு வரையிலான கால கட்டத்தில் கனிமவளத்துறை உதவி இயக்குனர்களாக பணியாற்றிய ரமேஷ் (வயது 62), கோவிந்தராஜ் (63), சாம்பசிவம் (62), செல்வசேகர் (54), சசிகுமார் (44), அ.தி.மு.க. முன்னாள் பெரியகுளம் ஒன்றிய செயலாளர் அன்னபிரகாஷ் உள்பட 12 பேர் மீதும் தேனி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
அதில், ரமேஷ், கோவிந்தராஜ், சாம்பசிவம் ஆகியோர் பணி ஓய்வு பெற்றுவிட்டனர். மற்ற உதவி இயக்குனர்கள் வேறு மாவட்டங்களுக்கு பணி இடமாறுதலில் சென்று விட்டனர். இந்த வழக்கில் தொடர்புடைய வருவாய்த்துறையினர் ஏற்கனவே பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், அ.தி.மு.க. முன்னாள் ஒன்றிய செயலாளர் அன்னபிரகாஷ், நிலஅளவையர் பிச்சைமணி ஆகியோர் சி.பி.சி.ஐ.டி. தொடர்ந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
கைது செய்ய தீவிரம்
வடவீரநாயக்கன்பட்டியில் கனிமவள கொள்ளை கண்டறியப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்ட இதே இடத்தில் தான் 2016-ம் ஆண்டு கால கட்டத்தில் அரசு நிலத்தில் சட்டவிரோதமாக மண் அள்ளியதாக சுமார் ரூ.16 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. அந்த அபராத தொகை முழுமையாக செலுத்தப்படாமல் நிலுவையில் இருந்தது.
அபராதம் விதிக்கப்பட்டு நிலுவையில் இருந்த இடம் தான் பின்னாளில் வருவாய்த்துறை அதிகாரிகள் துணையுடன் தனிநபர்களின் பெயரில் பட்டா வழங்கப்பட்டு, மீண்டும் அதே இடத்தில் கனிம வளம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனால் இந்த வழக்கில் தொடர்புடைய கனிமவளத்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளை கைது செய்ய லஞ்ச ஒழிப்புத்துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
Related Tags :
Next Story