ஏர்வாடி கடலில் இறங்கி மீனவர்கள் ஆர்ப்பாட்டம்


ஏர்வாடி கடலில் இறங்கி மீனவர்கள்  ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 14 Feb 2022 11:13 PM IST (Updated: 14 Feb 2022 11:13 PM IST)
t-max-icont-min-icon

ஏர்வாடி கடலில் இறங்கி மீனவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கீழக்கரை, 
ஏர்வாடி கடலில் இறங்கி மீனவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மணல்திட்டு
ராமநாதபுரம் மாவட்டம் மன்னார் வளைகுடா பகுதியான ஏர்வாடி பிச்சை முப்பன் வலசையில் 2 கிலோமீட்டர் தொலைவில் நடுக்கடலில் மணல்திட்டு அமைந்துள்ளதால் கடந்த வருடம் 2021-ம் ஆண்டு ஜனவரி மாதம் மன்னார் வளைகுடா உயிர்கோள காப்பக அதிகாரிகள் மூலம் கண்ணாடி இழை படகு சவாரி தொடங்கப்பட்டது.
இந்த சுற்றுலாதலத்தை காண்பதற்கு உள்ளூர், வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான பொது மக்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். இந்த நிலையில் அந்த பகுதியில் மீனவ மக்கள் சிலர் குடிசை போட்டு கடல் தொழில் செய்து வந்தனர். 
அங்கு அமைந்துள்ள குடிசைகள் சுற்றுலா பயணிகளுக்கு இடையூறாக உள்ளதாக கூறி வனத்துறை அதிகாரிகள் அந்தபகுதி மீனவர்களிடம் குடிசையை அகற்றி மேற்கு புறம் பகுதியில் குடிசை அமைத்துக் கொள்ளுமாறு வலியுறுத்தி வந்தனர்.இதில் சிலர் குடிசைகளை அப்புறப்படுத்தி சென்று விட்டனர். 
சில மீனவர்கள் இப்பகுதியில் குடிசைகளை அமைத்து பல வருடங்களாக நாங்கள் மீன் பிடி தொழிலில் ஈடுபட்டு வருகிறோம். இதனை காலி செய்ய இயலாது என்று மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளனர்.
ஆர்ப்பாட்டம்
இந்த நிலையில் நேற்று கடல் தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் அப்பகுதி மீனவர்கள் கடலில் இறங்கி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இப்பகுதியில் உள்ள மீனவர்கள் குடிசையை காலி செய்ய இயலாது என்றும் சுற்றுலாத் தலத்தை அப்புறப்படுத்தி வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்றும் மீனவர்கள் கோஷங்கள் எழுப்பியவாறு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Next Story