போலீஸ் நிலையத்தை அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் முற்றுகை
கோவையில் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்கக்கோரி கோவை ராமநாதபுரம் போலீஸ் நிலையத்தை அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை
கோவையில் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்கக்கோரி கோவை ராமநாதபுரம் போலீஸ் நிலையத்தை அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பரிசுப்பொருட்கள்
கோவையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் கோவை மாநகராட்சி 90-வது வார்டுக்கு உட்பட்ட கோவைப்புதூர் பெருமாள் கோவில் வீதியில் நேற்று முன்தினம் இரவு வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக ஒரு வாகனத்தில் பரிசுப்பொருட்கள் கொண்டு செல்லப்படுவதாக தகவல் கிடைத்தது.
இதையடுத்து அ.தி.மு.க.வினர் திரண்டு வந்து அந்த வாகனத்தை சிறைபிடித்து, பறக்கும் படையினருக்கு தகவல் கொடுத்தனர். மேலும் அ.தி.மு.க.வினர் அந்த வழியாக வந்த ஒரு காரில் பரிசு பொருட்கள் இருப்பதாக கூறி அதனை தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த துணை கமிஷனர்கள் ஜெயச்சந்திரன், உமா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் பரிசுப்பொருட்கள் இருந்ததாக கூறப்பட்ட சரக்கு வாகனம் பறக்கும் படை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.
தொடர்ந்து அந்த காரை சோதனை செய்யக்கோரி அ.தி.மு.க.வினர் அங்கிருந்த போலீசாரிடம் கூறினர். ஆனால் அதற்கு காரில் இருந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் இருதரப்பினரையும் சமாதானப்படுத்தி அனுப்பினர்.
அ.தி.மு.க.வினர் 8 பேர் கைது
இந்த நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அ.தி.மு.க.வை சேர்ந்த கல்யாணசுந்தரம் உள்பட 8 பேரை போலீசார் கைது செய்து கோவை ராமநாதபுரம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் பி.ஆர்.ஜி.அருண்குமார், அம்மன் அர்ச்சுனன், வி.பி.கந்தசாமி, தாமோதரன் உள்ளிட்ட எம்.எல்.ஏ.க்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், மாநகராட்சி கவுன்சிலர் வேட்பாளர்கள் என ஏராளமானோர் போலீஸ் நிலையம் முன் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்கள் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்கக்கோரியும், பரிசுப்பொருட்கள் கொண்டு வந்த தி.மு.க.வினர் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரியும் கோஷங்கள் எழுப்பினர். இதுகுறித்து தகவல் அறிந்த துணை கமிஷனர் உமா மற்றும் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் கைது செய்யப்பட்ட அ.தி.மு.க.வினர் விடுவிக்கப்பட்டனர்.
இதனிடையே முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ராமநாதபுரம் போலீஸ் நிலையத்திற்கு வந்து அங்கு போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சந்தித்து பேசினார். இதனைதொடர்ந்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story