வடுவூர் சரணாலயத்தில் குவிந்துள்ள ஆயிரக்கணக்கான பறவைகள்
வடுவூர் சரணாலயத்தில் ஆயிரக்கணக்கான பறவைகள் குவிந்துள்ளன. 8 ஆண்டுகளுக்கு பிறகு செண்டு வாத்து, கரண்டிவாயன் கொக்குகள் வந்துள்ளன.
வடுவூர்:
வடுவூர் சரணாலயத்தில் ஆயிரக்கணக்கான பறவைகள் குவிந்துள்ளன. 8 ஆண்டுகளுக்கு பிறகு செண்டு வாத்து, கரண்டிவாயன் கொக்குகள் வந்துள்ளன.
வடுவூர் சரணாலயம்
திருவாரூர் மாவட்டம் வடுவூரில் மன்னார்குடி-தஞ்சை இடையே வடுவூர் ஏரி உள்ளது. இந்த ஏரி பறவைகளின் சரணாலயமாக உள்ளது. வடுவூர் ஏரியை சுற்றி நெல் வயல்கள், ஈர நிலங்கள் அதிக அளவில் உள்ளன.
வடுவூர் சரணாலயத்திற்கு ஆண்டு தோறும் செப்டம்பர் மாதத்தில் இருந்து மத்திய ஆசியா மற்றும் ஐரோப்பா உள்ளிட்ட நாடுகளில் இருந்தும், இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் 38 வகையான 2 லட்சத்திற்கும் மேற்பட்ட பறவைகள் இங்கு வந்து செல்லும்.
ஆயிரக்கணக்கில் குவிந்த பறவைகள்
இந்த பறவைகள் இங்கு தங்கி முட்டையிட்டு குஞ்சு பொரித்து, ஏப்ரல் மாதத்தில் தங்கள் நாடுகளுக்கு திரும்பி சென்று விடும்.
இந்த ஆண்டு சீசன் தொடங்கி உள்ளதால் வடுவூர் சரணாலயத்தில் ஆயிரக்கணக்கான பறவைகள் வந்து குவிந்துள்ளன. இந்த பறவைகளை சுற்றுலா பயணிகள் கண்டுகளித்து வருகின்றனர்.
கணக்கெடுப்பு பணி
இந்த சரணாலயத்திற்கு வந்துள்ள பறவைகள் குறித்து கணக்கெடுப்பு பணி நடந்தது. இந்த பணியை மாவட்ட வன அலுவலர் அறிவொளி தொடங்கி வைத்து பார்வையிட்டார். கணக்கெடுப்பில், இந்த ஆண்டு வடுவூர் சரணாலயத்துக்கு 55 வகையான நீர்ப்பறவைகள், 64 வகையான நிலப் பறவைகள் என மொத்தம் 119 வகைகளை சேர்ந்த 27 ஆயிரம் பறவைகள் வந்துள்ளன.
செண்டு வாத்து, கரண்டிவாயன் கொக்குகள்
குறிப்பாக 8 ஆண்டுகளுக்கு பிறகு செண்டு வாத்து மற்றும் கரண்டிவாயன் கொக்குகள் அதிகளவில் வந்து குவிந்துள்ளன. கருப்பு தலையுடன் கூடிய அரிய வகை அரிவாள் மூக்கன் கொக்கு அதிகளவில் வந்துள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story