தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 15 Feb 2022 12:24 AM IST (Updated: 15 Feb 2022 12:24 AM IST)
t-max-icont-min-icon

தினத்தந்தி புகார் பெட்டியில் வெளிவந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான செய்திகள் வருமாறு:-

மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி சீரமைக்கப்படுமா?

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி நகராட்சி ஒத்தைதெரு ஆனந்த விநாயகர் கோவில் அருகே மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. இந்த நீர்த்தேக்க தொட்டி உள்ள கட்டிடத்தின் கீழ் தளத்தில் துணை வணிக வரி, தனி தாசில்தார், வருவாய்த்துறை, நீதிமன்றம் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. இந்த நிலையில் பராமரிப்பில்லாததால் மேல்நிலை நீர்த்தேக்க  தொட்டியில் செடி, கொடிகள் வளர்ந்து உள்ளன. குறிப்பாக தொட்டியில் உள்ள சிமெண்டு காரைகள் பெயர்ந்து விரிசல் ஏற்பட்டு தண்ணீர் வெளியே கசிந்து வருகிறது. மேலும் விரிசல்கள் ஏற்பட்டுள்ளதால் தொட்டி வலுவிழந்து காணப்படுகிறது. எனவே அசம்பாவிதம் எதுவும் ஏற்படும் முன்பு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் உள்ள செடி, கொடிகளை அகற்றி, தொட்டியை சீரமைத்து தர நடவடிக்கை எடுப்பார்களா?
                                 
                                                                                                                                   -கோவிந்தராஜ், மன்னார்குடி.

குண்டும், குழியுமான சாலை

நாகை மாவட்டம் கீழையூர் ஒன்றியம் வெண்மனச்சேரி ஊராட்சி கிராமத்தில் உள்ள காலனி தெரு சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் மழைக்காலங்களில் சாலையில் மழைநீர் குளம்போல் தேங்கி நிற்கிறது. இதன் காரணமாக பொதுமக்கள் சாலையில் நடந்து செல்ல முடியாத சூழல் ஏற்படுகிறது. மேலும் தேங்கி கிடக்கும் மழை நீரில் கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. மேலும் குண்டும், குழியுமான சாலையினால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள குண்டும், குழியுமான சாலையை சீரமைத்து தர நடவடிக்கை எடுப்பார்களா?

                                                                                                                                                 -பொதுமக்கள், நாகை,

Next Story