தி.மு.க. வேட்பாளர் திடீர் சாவு
வத்திராயிருப்பு பேரூராட்சியில், 2-வது வார்டு தேர்தலில் போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர் திடீரென இறந்ததால் அந்த வார்டுக்குரிய தேர்தல் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
வத்திராயிருப்பு,
வத்திராயிருப்பு பேரூராட்சியில், 2-வது வார்டு தேர்தலில் போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர் திடீரென இறந்ததால் அந்த வார்டுக்குரிய தேர்தல் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
வேட்பாளர் திடீர் சாவு
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி அரசியல் கட்சியினர் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு உள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. இதில் 2-வது வார்டில் தி.மு.க. சார்பில் முத்தையா (வயது 43) என்பவர் போட்டியிட்டார்.
இவர் கடந்த சில நாட்களாக தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார். நேற்று முன்தினம் மாலையும் பிரசாரத்தில் ஈடுபட்டு விட்டு வீட்டிற்கு வந்தார். நள்ளிரவு 1 மணி அளவில் அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
உடனே அவரை உறவினர்கள் சிகிச்சைக்காக வத்திராயிருப்பு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் முத்தையா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
வத்திராயிருப்பு மேலத்தெருவில் வசித்து வந்த இவருக்கு சுந்தரலட்சுமி (32) என்ற மனைவியும், முத்து ஈசுவரி (18), தனலட்சுமி (16) என 2 மகள்களும் உள்ளனர். முத்தையா கூலிவேலை செய்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
2-வது வார்டு தேர்தல் ஒத்திவைப்பு
முத்தையா மரணம் குறித்து அளிக்கப்பட்ட தகவலின் அடிப்படையில் வத்திராயிருப்பு பேரூராட்சி 2-வது வார்டு தேர்தல் ஒத்தி வைக்கப்படுவதாக வத்திராயிருப்பு பேரூராட்சி தேர்தல் நடத்தும் அலுவலர் ரவிசங்கர் அறிவித்துள்ளார்.
Related Tags :
Next Story