பதற்றமான வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும்
விழுப்புரத்தில் உள்ள பதற்றமான வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என மாவட்ட தேர்தல் பார்வையாளர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்டத்தில் 3 நகராட்சிகள், 7 பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந் தேதி நடக்கிறது. இதையொட்டி தேர்தலுக்கான முன்னேற்பாடு பணிகள் அனைத்தும் தீவிரமாக நடந்து வருகிறது. இப்பணிகளை கண்காணிக்க நியமிக்கப்பட்டுள்ள மாவட்ட தேர்தல் பார்வையாளர் லட்சுமி, அவ்வப்போது வாக்குச்சாவடிகள், வாக்கு எண்ணும் மையங்களை நேரில் பார்வையிட்டு முன்னேற்பாடு பணிகளை துரிதப்படுத்தி வருகிறார்.
இந்நிலையில் நேற்று விழுப்புரத்தில் உள்ள பதற்றமான வாக்குச்சாவடிகளான வழுதரெட்டி காலனியில் உள்ள வாக்குச்சாவடி மையத்திலும், விழுப்புரம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் உள்ள வாக்குச்சாவடி மையத்திலும் மாவட்ட தேர்தல் பார்வையாளர் லட்சுமி ஆய்வு மேற்கொண்டார்.
பாதுகாப்பை பலப்படுத்த
அப்போது வாக்குச்சாவடி மையங்களில் வாக்குச்சாவடி அலுவலர்கள் தங்குவதற்கான அறைகள், மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள் எளிதில் வாக்களிப்பதற்காக சக்கர நாற்காலியில் செல்லும் வகையில் சாய்வுதள வசதி, தடையில்லா மின்சார வசதியுடன் கூடிய மின்விளக்கு, மின்விசிறி, சுகாதாரமான குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
மேலும் பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடிகளில் தேர்தல் நிகழ்வுகளை முழுமையாக கண்காணிக்க வசதியாக தேவையான இடங்களில் சி.சி.டி.வி. கேமரா பொருத்தி தீவிரமாக கண்காணிக்க வேண்டும், அதுபோல் அசம்பாவிதம் நடைபெறாமல் நேர்மையான முறையில் தேர்தல் நடைபெறவும், மக்கள் அச்சமின்றி வாக்களிக்க ஏதுவாகவும் கூடுதல் போலீசாரை பணியில் ஈடுபடுத்தி பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் எனவும் உத்தரவிட்டார். அதோடு வாக்குச்சாவடிகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கிருமி நாசினி தெளித்து நன்கு சுத்தப்படுத்த வேண்டுமெனவும் அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின்போது விழுப்புரம் நகராட்சி தேர்தல் நடத்தும் அதிகாரி சுரேந்திரஷா, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் ஜோதிமணி, துணை போலீஸ் சூப்பிரண்டு பார்த்திபன் மற்றும் பலர் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story