தஞ்சை மாநகராட்சி அலுவலகத்தில் தி.மு.க. பிரமுகர், குடும்பத்துடன் தர்ணா


தஞ்சை மாநகராட்சி அலுவலகத்தில் தி.மு.க. பிரமுகர், குடும்பத்துடன் தர்ணா
x
தினத்தந்தி 15 Feb 2022 1:47 AM IST (Updated: 15 Feb 2022 1:47 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சை மாநகராட்சி அலுவலக வளாகத்தில் தி.மு.க. பிரமுகர், குடும்பத்துடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அனுமதியின்றி வாக்காளர் பட்டியலில் இருந்து தனது பெயர் நீக்கப்பட்டுள்ளதாக கூறி அவர் இந்த போராட்டத்தில் ஈடுபட்டார்.

தஞ்சாவூர்:
தஞ்சை மாநகராட்சி அலுவலக வளாகத்தில் தி.மு.க. பிரமுகர், குடும்பத்துடன்  தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அனுமதியின்றி வாக்காளர் பட்டியலில் இருந்து தனது பெயர் நீக்கப்பட்டுள்ளதாக கூறி அவர் இந்த போராட்டத்தில் ஈடுபட்டார்.
தி.மு.க. பிரமுகர்
தஞ்சை கீழஅலங்கம் மல்லனப்பா சந்து பகுதியை சேர்ந்தவர் ராஜமாணிக்கம். தி.மு.க. 15-வது வார்டு பிரதிநிதி. இவர் நேற்று தஞ்சை மாநகராட்சி அலுவலகத்துக்கு தனது மனைவி மற்றும் மகளுடன் வந்தார். அங்கு வந்த அவர், திடீரென குடும்பத்துடன் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள தேசிய கொடிக் கம்பத்தின் அருகே தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். 
இதையடுத்து போலீசார் அவர்களை அப்புறப்படுத்தி தர்ணாவில் ஈடுபட அனுமதி கிடையாது. உங்கள் கோரிக்கையை மனுவாக அளியுங்கள் என கூறினர்
பெயர் நீக்கம்
அதன் பின்னர் ராஜமாணிக்கம் மாநகராட்சி ஆணையர் சரவணகுமாரிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
நான் 9-வது வார்டில் உள்ள பாலோபாநந்தவனத்தில் தற்காலிகமாக வசித்து வருகிறேன். 43 ஆண்டுகளாக மாநகராட்சி 15-வது வார்டில் வசித்து வந்தேன். எனவே எனக்கு அந்த வார்டு முகவரியில் வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்பட்டது. 
இந்நிலையில் என்னுடைய பெயரை எனது அனுமதியின்றி மறைமுகமாக இணையதளத்தின் மூலம் வாக்காளர் பட்டியலில் இருந்து அ.தி.மு.க. நிர்வாகி ஒருவர் நீக்கம் செய்துள்ளார்.
நடவடிக்கை
நான் வேறு முகவரியில் வசிப்பதாக காரணம் கூறி எனது பெயரை மட்டும் நீக்கி உள்ளனர். ஆனால் எனது மனைவி, மகள் ஆகியோரது பெயரை நீக்கவில்லை. என்னிடம் விசாரணை எதுவும் செய்யாமல் என் பெயரை நீக்கம் செய்த மாநகராட்சி ஊழியர்களை விசாரிக்க வேண்டும். சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். நான் இந்த தேர்தலில் கண்டிப்பாக வாக்களிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story