2 மகன்களை கொன்று பெண் தற்கொலை
ஓமலூர் அருகே கணவரின் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் 2 மகன்களை கொன்று, இளம்பெண் கல்லை கட்டிக்கொண்டு கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
ஓமலூர்:-
ஓமலூர் அருகே கணவரின் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் 2 மகன்களை கொன்று, இளம்பெண் கல்லை கட்டிக்கொண்டு கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
கணவன், மனைவி
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள கணவாய் புதூர் ஊராட்சி கே.மோரூர் லேண்ட் காலனி பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 32). இவருடைய மனைவி மரகதம் (30). இவர்களுக்கு திருமணம் ஆகி 10 ஆண்டுகள் ஆகிறது. செல்வகணபதி (7), கோகுலக்கண்ணன் (5) என்ற 2 மகன்கள் இருந்தனர்.
பிரபாகரனுக்கு சொந்தமாக விவசாய நிலங்கள் உள்ளன. மேலும் அவர் பழைய பிளாஸ்டிக் பொருட்கள் நிறுவனமும் நடத்தி வருகிறார். அதாவது பழைய பிளாஸ்டிக் பொருட்களை உருக்கி சிறு உருண்டைகளாக மாற்றி பிளாஸ்டிக் பைகள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிக்கும் கம்பெனிகளுக்கு விற்பனை செய்து வருகிறார்.
நடத்தையில் சந்தேகம்
இந்த நிலையில் பிரபாகரனுக்கும், அவரது நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த ஒரு பெண்ணுக்கும் இடையே தொடர்பு இருந்ததாக, அவரது நடத்தையில் மரகதம் சந்தேகப்பட்டதாக தெரிகிறது. இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இதைத்தொடர்ந்து அந்த பெண்ணை கடந்த 2 மாதத்துக்கு முன்பு வேலையில் இருந்து நிறுத்தி விட்டனர். எனினும் பிரபாகரனுக்கும், அந்த பெண்ணுக்கும் இடையே தொடர்பு உள்ளதாக மரகதம் சந்தேகப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக நேற்று முன்தினம் கணவன், மனைவிக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டு உள்ளது. இதனால் மரகதம் அதே பகுதியை சேர்ந்த பிரபாகரனின் பெரியப்பா ராமலிங்கம் வீட்டுக்கு சென்று புகார் கூறியுள்ளார். இதையடுத்து அவர் பிரபாகரனை வரவழைத்து பேசியதாக தெரிகிறது. பின்னர் நள்ளிரவு தான் அவர்கள் வீட்டுக்கு வந்துள்ளனர்.
80 அடி ஆழ கிணறு
பின்னர் காலையில் எழுந்து பிரபாகரன் தனது நிறுவனத்துக்கு சென்று விட்டதாக தெரிகிறது. திரும்பி வந்து வீட்டில் பார்த்தபோது மனைவி மரகதம் மற்றும் மகன்கள் செல்வகணபதி, கோகுலக்கண்ணன் ஆகியோரை காணாததால் அதிர்ச்சி அடைந்தார். தொடர்ந்து அவர் தனது தோட்டத்தில் உள்ள விவசாய கிணற்றில் மரகதத்தின் செருப்பு மிதந்துள்ளதை பார்த்தார்.
இது குறித்து தீவட்டிப்பட்டி போலீசாருக்கும், காடையாம்பட்டி தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. அதன் பேரில் தீவட்டிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் மற்றும் போலீசார், தீயணைப்பு நிலைய அலுவலர் ராஜசேகர் தலைமையிலான தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். தீயணைப்பு துறையினர் கிணற்றில் 3 பேரையும் தேடும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 80 அடி ஆழமுள்ள கிணற்றில் தண்ணீர் முழுவதும் இருந்ததால், அவர்களை தேடும் பணியில் சிரமம் ஏற்பட்டது.
உடல்கள் மீட்பு
ஒரு மணி நேர போராட்டத்துக்கு பிறகு, இடுப்பில் கயிற்றால் கல்லை கட்டிய நிலையில் மரகதத்தின் உடலை தீயணைப்பு துறையினர் மீட்டனர். சிறிது நேரத்தில் செல்வகணபதியின் உடல் மீட்கப்பட்டது. மேலும் கோகுலக்கண்ணன் உடலை மீட்பதில் சிரமம் ஏற்பட்டதால், மின்மோட்டார்களை கொண்டு கிணற்றில் இருந்து தண்ணீர் வெளியேற்றப்பட்டது. சுமார் 3 மணி நேர போராட்டத்துக்கு பிறகு கோகுலக்கண்ணன் உடலை மீட்டனர். 3 பேரின் உடல்களை பார்த்து உறவினர்கள் கதறி அழுதது உருக்கமாக இருந்தது.
மரகதத்துக்கு நீச்சல் தெரியும் என்பதால் உடலில் கல்லை கட்டிக்கொண்டு 2 மகன்களை அணைத்துக் கொண்டு கிணற்றில் குதித்து தற்கொலை செய்து இருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர். தொடர்ந்து போலீசார் 3 பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக தீவட்டிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து மரகதத்தின் கணவர் பிரபாகரனிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கணவரின் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் மனமுடைந்த பெண், 2 மகன்களை கொன்று கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story