ஹிஜாப் விவகாரத்தால் போராட்டம்; தனியார் பள்ளி ஆசிரியை ராஜினாமா


ஹிஜாப் விவகாரத்தால் போராட்டம்; தனியார் பள்ளி ஆசிரியை ராஜினாமா
x
தினத்தந்தி 15 Feb 2022 2:44 AM IST (Updated: 15 Feb 2022 2:44 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில் ஹிஜாப் விவகாரத்தில் நடந்த போராட்டத்தை தொடர்ந்து தனியார் பள்ளி ஆசிரியை தனது பணியை ராஜினாமா செய்துள்ளார்.

பெங்களூரு: பெங்களூருவில் ஹிஜாப் விவகாரத்தில் நடந்த போராட்டத்தை தொடர்ந்து தனியார் பள்ளி ஆசிரியை தனது பணியை ராஜினாமா செய்துள்ளார்.

பெற்றோர் போராட்டம்

கர்நாடகத்தில் ஹிஜாப் விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. உடுப்பி மாவட்டம் குந்தாபுராவில் உள்ள அரசு பள்ளியில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிய அரசு தடை விதித்திருந்தது. இதற்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இதையடுத்து, மாநிலத்தின் பல்வேறு பள்ளிகளிலும் ஹிஜாப் விவகாரம் தலை தூக்கிஉள்ளது. அதன்படி, கடந்த 12-ந் தேதி பெங்களூரு சந்திரா லே-அவுட்டில் உள்ள வித்யா சாகர் பள்ளியிலும் ஹிஜாப் விவகாரம் தொடா்பாக ஆசிரியை சசிகலாவுக்கும், மாணவிகளுக்கும் இடையே வாக்குவாதம் உண்டானது.

மாணவிகளை, சசிகலா தரக்குறைவாக பேசியதாக கூறி, பள்ளி முன்பு பெற்றோர் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டு இருந்தனர். அத்துடன் ஆசிரியை சசிகலா மீது சந்திரா லே-அவுட் போலீஸ் நிலையத்தில் மாணவிகளின் பெற்றோர் புகாரும் அளித்துள்ளனர். அதன்பேரில், விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

ஆசிரியை ராஜினாமா

ஆனால் தங்களது பள்ளியில் ஹிஜாப் விவகாரம் காரணமாக பிரச்சினையும் ஏற்படவில்லை, இந்த விவகாரத்தில் சசிகலாவுக்கு ஆதரவாக பள்ளி நிர்வாகம் இருக்கும் என்று பள்ளி உரிமையாளர் ராஜூவ் தெரிவித்திருந்தார். ஆசிரியை சசிகலாவும் மாணவிகளை தரக்குறைவாக பேசவில்லை, வகுப்பறையில் சண்டை போட்ட மாணவிகளின் பெயர்களை தான் கரும்பலகையில் எழுதி போட்டேன் என்று விளக்கம் அளித்திருந்தார். ஆனாலும் இந்த விவகாரம் காரணமாக ஆசிரியை சசிகலா மிகுந்த வேதனை அடைந்திருந்ததாக தெரிகிறது.

இந்த நிலையில், ஆசிரியை சசிகலா நேற்று தனது பணியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். இதுதொடா்பாக அவர் பள்ளி நிர்வாகத்திற்கு கடிதம் எழுதி அனுப்பி வைத்துள்ளார். அந்த கடிதத்தில், நான் பணியாற்றிய பள்ளியில் இந்த அளவுக்கு பெரிய பிரச்சினை ஏற்பட்ட பின்பு, அங்கு பணியாற்ற சாத்தியமில்லை. அத்துடன் உடல் நலக்குறைவு காரணமாக எனது பணியை ராஜினாமா செய்கிறேன், என்று கூறியுள்ளார்.

Next Story