வாக்குப்பதிவு எந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர்-சின்னங்கள்
வாக்குப்பதிவு எந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர்-சின்னங்கள் பொருத்தப்பட்டன.
பெரம்பலூர்:
112 வேட்பாளர்கள்
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 19-ந்தேதி நடைபெறவுள்ளதையொட்டி பெரம்பலூர் நகராட்சி, குரும்பலூர், அரும்பாவூர், பூலாம்பாடி, லெப்பைக்குடிகாடு பேரூராட்சிகளில் வாக்காளர்கள் வாக்களிப்பதற்காக மொத்தம் 110 வாக்குச்சாவடிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டு வருகின்றன. பேரூராட்சிகளில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் வேட்பாளரின் பெயர் மற்றும் சின்னம் அடங்கிய பேலட் சீட் பொருத்தும் பணி நடைபெற்று முடிந்தது.
அதனை தொடர்ந்து பெரம்பலூர் நகராட்சியில் 21 வார்டுகளில் போட்டியிடும் மொத்தம் 112 வேட்பாளர்களின் பெயர், அவர்களது சின்னங்கள் அடங்கிய பேலட் சீட்டை வாக்குப்பதிவு எந்திரங்களில் பொருத்தும் பணி, அந்தந்த வார்டு வேட்பாளர்களின் முன்னிலையில் நகராட்சி அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.
50 வாக்குப்பதிவு எந்திரங்களில்...
முன்னதாக வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டிருந்த தனி அறை ‘சீல்' உடைக்கப்பட்டது. பின்னர் அங்கிருந்த நகராட்சியில் 50 வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்படவுள்ள 50 வாக்குப்பதிவு எந்திரங்கள் எடுக்கப்பட்டு, அந்தந்த வார்டுகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர், சின்னம் பொருத்தப்பட்டது.
மேலும் கட்டுப்பாட்டு கருவிகளும், வேட்பாளர் பெயர், சின்னம் பொருத்தப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்களுடன் பொருத்தி சரிபார்க்கப்பட்டது. இதில் 5-வது வார்டில் அதிகபட்சமாக 8 பேரும், குறைந்தபட்சமாக 2, 9, 17 ஆகிய 3 வார்டுகளில் தலா 3 பேரும் போட்டியிடுகின்றனர். அந்த வார்டுகளுக்குரிய வாக்குப்பதிவு எந்திரங்களில் அந்த வேட்பாளர்களின் பெயர், சின்னம் பொருத்தப்பட்டது.
தேர்தல் பார்வையாளர் ஆய்வு
இதையடுத்து அந்த வாக்குப்பதிவு எந்திரங்களும், கட்டுப்பாட்டு கருவிகளும் தனி அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு, அறைக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது. மேலும் அந்த அறை முன்பு துப்பாக்கி ஏந்திய போலீசார் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை பெரம்பலூர் மாவட்ட தேர்தல் பார்வையாளர் ரத்னா, வட்டார தேர்தல் பார்வையாளர் ஷோபா பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது பெரம்பலூர் நகராட்சி தேர்தல் நடத்தும் அலுவலர் குமரிமன்னன், தேர்தல் நடத்தும் உதவி அலுவலர்கள் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story