தமிழகத்தில் எந்த தேர்தல் வந்தாலும் அ.தி.மு.க. தான் வெற்றி பெறும் ஓ.பன்னீர்செல்வம் பேச்சு


தமிழகத்தில் எந்த தேர்தல் வந்தாலும் அ.தி.மு.க. தான் வெற்றி பெறும் ஓ.பன்னீர்செல்வம் பேச்சு
x
தினத்தந்தி 15 Feb 2022 2:49 AM IST (Updated: 15 Feb 2022 2:49 AM IST)
t-max-icont-min-icon

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை தொடர்ந்து தமிழகத்தில் எந்த தேர்தல் நடந்தாலும் அ.தி.மு.க. தான் வெற்றி பெறும் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

நாகர்கோவில்:
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை தொடர்ந்து தமிழகத்தில் எந்த தேர்தல் நடந்தாலும் அ.தி.மு.க. தான் வெற்றி பெறும் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
வேட்பாளர்கள் அறிமுக கூட்டம்
குமரி மாவட்ட நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்களின் அறிமுக கூட்டம் நாகர்கோவில் நாகராஜா திடலில் நேற்று இரவு நடந்தது. கூட்டத்துக்கு கட்சியின் அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி பேசினார்.
அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், சட்டசபை எதிர்க்கட்சி துணைத்தலைவருமான ஓ.பன்னீர்செல்வம் வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
100-க்கு 100 சதவீதம்
கூட்டம் என்று சொல்லி தளவாய்சுந்தரம் இங்கு ஒரு மாநாட்டையே நடத்தி கொண்டிருக்கிறார். அனைத்து மாவட்டங்களிலும் குமரி மாவட்டம் முதல் மாவட்டமாக இருக்கிறது என்பதை நான் தெரிவித்து கொள்ள கடமைப்பட்டுள்ளேன். 1972-ம் ஆண்டு எம்.ஜி.ஆரால் தொடங்கப்பட்ட இந்த இயக்கம், எந்த கொம்பாதி கொம்பனாலும் அசைக்க முடியாத எக்கு கோட்டையாக உள்ளது.
2011, 2016-ல் ஜெயலலிதா தலைமையில் பொற்கால ஆட்சி அமைந்தது. அப்போது நடந்த தேர்தல்களில் ஜெயலலிதா அறிவித்த வாக்குறுதிகள் 100-க்கு 100 சதவீதம் நிறைவேற்றப்பட்டது.
மக்கள் காத்திருக்கிறார்கள்
2021-ம் ஆண்டு தேர்தலில் தொடர்ந்து அ.தி.மு.க. 3-வது முறையாகவும் வெல்லும் என்ற நிலை உருவானது. நல்ல சூழல் அமைந்தது. அந்த நேரத்தில் தி.மு.க. 25 வாக்குறுதிகள் கொடுத்தார்கள். அனைத்தும் நடைமுறைப்படுத்த முடியாத, பொய்யான வாக்குறுதிகள். திரும்ப, திரும்பச் சொல்லி மக்களை நம்ப வைத்து, நம்பிய மக்களுக்கு இன்று நாமத்தை போட்டு விட்டார்கள்.
மக்கள் தற்போது இதை அறிந்து, புரிந்து எப்போது இந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும்? 19-ந் தேதி எப்போது வரும்? என்று காத்திருக்கிறார்கள். 
நீட் தேர்வு ரத்தாகாது
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த சட்டசபை தேர்தலின்போது நான் முதல்-அமைச்சர் ஆனதும் நான் போடுகிற முதல் கையெழுத்து நீட் தேர்வு ரத்து செய்யப்படுவதற்கான கையெழுத்து என்றார். நீட் தேர்வு ரத்து செய்யப்படுவதற்கு யார் கையெழுத்து போட வேண்டும்? நாடாளுமன்றத்திலும், ராஜ்யசபாவிலும் சட்ட மசோதா கொண்டுவந்து இரண்டிலும் நிறைவேற்ற வேண்டும். அந்த சட்ட மசோதாவை ஜனாதிபதிக்கு அனுப்ப வேண்டும். அவர் கையெழுத்து போட்டால்தான் நீட் தேர்வு ரத்து ஆகும். இவர் வீட்டில் உட்கார்ந்துகொண்டே கையெழுத்து போட்டுக் கொண்டே இருக்க வேண்டியதுதான். எந்த காலத்திலும் நீட் தேர்வு ரத்து ஆகாது.
30 வயதுக்கு உட்பட்ட மாணவர்களின் கல்விக் கடன் ரத்து செய்யப்படும் என்று சொன்னீர்களே, செய்தீர்களா? இல்லை. தாய்மார்களுக்கு அவர்களுடைய வங்கி கணக்குக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் செலுத்தப்படும் என்று சொன்னீர்களே. ஆட்சிக்கு வந்து 10 மாதம் ஆகி விட்டது. இன்னும் வரவில்லை. தாய்மார்கள் எல்லாம் வங்கிக்கு சென்று பணம் வந்ததா? வந்ததா? என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். வங்கியில் உள்ளவர்கள் அவர்கள் பொய் சொல்லி விட்டு போய் விட்டார்கள், எங்களை வந்து நீங்கள் தொல்லை செய்து கொண்டிருக்கிறீர்கள் என்று கூறுகிறார்கள்.
ஆட்சியின் அவலநிலை
5 பவுனுக்கு குறைவாக கூட்டுறவு வங்கிகளில் அடகு வைத்தவர்களுக்கு கடன் தள்ளுபடி செய்யப்படும் என்றார்கள். இதை நம்பி 50 லட்சம் பேர் போய் அடகு வைத்து விட்டார்கள். அந்த பணத்தை வாங்கி செலவும் செய்து விட்டார்கள். ஆனால் தற்போது கடனை தள்ளுபடி செய்ய யாருக்கு தகுதி இருக்கிறது என்று ஆய்வு செய்கிறார்கள். ஆய்வில் 13 லட்சம் பேர் தான் தகுதி உள்ளவர்களாக இருக்கிறார்கள் என்கிறார்கள். 37 லட்சம் பேரின் நகைகளும் போய்விட்டது. கடனை செலுத்த முடியாமல் நடுத்தெருவில் நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இப்படி எல்லாம் பொய் சொல்லி ஒரு கட்சி, ஆட்சிக்கு வந்து மக்களுக்கு எந்த பயனும் இல்லாத ஆட்சியாக இருக்கிறது. தற்போது நடைமுறையில் உள்ள திட்டங்கள் அனைத்தும் அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களாக உள்ளன. இந்த ஆட்சியில் மக்களுக்கு பயனுள்ள திட்டங்கள், தொலை நோக்குத் திட்டங்கள் பேரூராட்சிக்கு, நகராட்சிக்கு, மாநகராட்சிக்கு வந்துள்ளதா? இல்லை. நிர்வாகத்தை எப்படி நடத்துவது என்று தெரியாமல் அவர்கள் குழப்பம் அடைந்துள்ளனர். இதுதானே இன்றைக்கு இருக்கும் ஆட்சியின் அவலநிலையாக இருக்கிறது.
பொங்கல் பரிசுத் தொகுப்பு இந்த ஆட்சியில் கொடுத்தார்கள். அதைச் சொன்னாலே தாய்மார்களுக்கு சிரிப்பு வருகிறது. அவர்கள் வழங்கிய பரிசுத் தொகுப்பில் உள்ள அரிசியை சமைத்து சாப்பிட முடியாது. வெல்லம் உருகி தண்ணீராக போய்விட்டது. இப்படி மோசமான நிலைதான் தமிழகத்தில் ஏற்பட்டுள்ளது. அ.தி.மு.க. ஆட்சியில் வேட்டி- சேலையாக இருந்தாலும், பொங்கல் பரிசு தொகுப்பாக இருந்தாலும் தரமானதாக இருந்தது.
விஞ்ஞான ஊழல்
பொங்கல் பரிசுத் தொகுப்பு பொருட்களை எங்கிருந்து வாங்கினார்கள் என்று தாய்மார்கள் கண்டு பிடித்து விட்டார்கள். வடநாட்டில் இருந்து வாங்கியிருக்கிறார்கள். தமிழகத்தில் எத்தனை அண்ணாச்சி கடைகள் இருக்கிறது. அண்ணாச்சி கடையில் சுத்தமாக, பேக் செய்து வைத்திருப்பார்கள். இங்கு வாங்கியிருக்கலாம். வடநாட்டில் இருந்து எதற்காக வாங்கினார்கள் என்றால் விஞ்ஞான ரீதியிலான ஊழல். அதுதான் இன்று நடந்து கொண்டிருக்கிறது.
அ.தி.மு.க. ஆட்சியில் ஆய்வு செய்து பயனுள்ள திட்டமாக, மக்களுக்கு பயனளிக்கும் திட்டமாக வழங்கப்பட்டு வந்தது. எனவே நல்ல வாய்ப்பாக அ.தி.மு.க.வுக்கு பொதுமக்கள் சிந்தித்து செயல்படுகின்ற தேர்தல்தான் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல். யார் நல்லாட்சி தந்தார்கள்? என்று எடைபோட்டு பார்க்கின்ற தேர்தலாக இந்த தேர்தல் அமைந்துள்ளது. பொய்யான வாக்குறுதிகளை தந்து ஆட்சிக்கு வந்திருக்கிறார்கள். அடுத்து எந்த தேர்தல் வந்தாலும் வெற்றிபெறப்போவது அ.தி.மு.க.தான் என்பதற்கு நல்ல சூழல், ஆரோக்கியமான சூழல் ஏற்பட்டுள்ளது. மக்கள் அந்த அளவுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகிறார்கள். தி.மு.க.வைப் போல மக்களுக்கு எந்த தீங்கும் நாங்கள் செய்தது இல்லை. கொரோனா 3-வது அலையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தி.மு.க.வினர் யாருக்காவது சின்ன வாழைப்பழமாவது கொடுத்திருப்பார்களா?
தொண்டர்களுக்கான தேர்தல்
எனவே நம்மை வளர்த்தவர்கள், உருவாக்கியவர்கள் கொடுத்து பழக்கப்பட்டவர்கள். தி.மு.க.வினர் எடுத்து பழக்கப்பட்டவர்கள். அதுதான் வரலாறு. இந்த தேர்தல் தொண்டர்களுக்கான தேர்தல். தொண்டர்கள் கட்சியாக அ.தி.மு.க. உள்ளது. இந்த தொண்டர்கள் தான் அ.தி. மு.க.வை உருவாக்கினார்கள். 
தாய்மார்கள் பேரூராட்சி, நகராட்சி தலைவர்களாக, மேயர்களாக வந்தால் அந்த நிர்வாகம் தூய நிர்வாகமாக இருக்கும். எனவே கட்சி வேட்பாளர்களுக்கு இரட்டை இலை சின்னத்தில் வெற்றி பெறச் செய்வதுதான் மறைந்த எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோருக்கு நன்றி செலுத்துவதாக இருக்கும். நல்ல தீர்ப்பை வழங்கக்கூடிய நீதிபதிகளாக இருக்கும் மக்களை வீடு, வீடாகச் சந்தித்து நமது ஆட்சியின் சாதனைகளை, தி.மு.க. ஆட்சியின் அவலநிலையைச் சொல்லி வாக்கு சேகரியுங்கள், கட்சியின் வேட்பாளர்களை வெற்றிபெறச் செய்யுங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.
முன்னதாக கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் எஸ்.ஏ.அசோகன் வரவேற்று பேசினார். கூட்டத்தில் மேற்கு மாவட்ட செயலாளர் ஜாண் தங்கம், முன்னாள் அமைச்சர் கே.டி.பச்சைமால், முன்னாள் எம்.எல்.ஏ. நாஞ்சில் முருகேசன்,  மாவட்ட பஞ்சாயத்து தலைவர் மெர்லியன்ட் தாஸ், நிர்வாகிகள் கிருஷ்ணதாஸ், பரமேஸ்வரன், சேவியர் மனோகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாநகர செயலாளர் சந்துரு என்ற ஜெயச்சந்திரன் நன்றி கூறினார்.
பிரசார கூட்ட மேடையில் நாகர்கோவில் மாநகராட்சி அ.தி.மு.க. வேட்பாளர்கள் அனைவரும் அமர்ந்து இருந்தனர். கூட்ட முடிவில் அவர்கள் அனைவரும் ஓ.பன்னீர் செல்வத்திடம் ஆசி பெற்றனர்.

Next Story