பி.பி.எல். ரேஷன் கார்டுகளுக்கு கூடுதல் அரிசி
கர்நாடகத்தில் பி.பி.எல். ரேஷன் கார்டுகளுக்கு கூடுதல் அரிசி வழங்கப்படும் என்றும், இந்த திட்டம் வருகிற ஏப்ரல் மாதம் முதல் அமலுக்கு வரும் என்றும் கர்நாடக சட்டசபை கூட்டு கூட்டத்தில் கவர்னர் தாவர்சந்த் கெலாட் அறிவித்தார்.
பெங்களூரு: கர்நாடகத்தில் பி.பி.எல். ரேஷன் கார்டுகளுக்கு கூடுதல் அரிசி வழங்கப்படும் என்றும், இந்த திட்டம் வருகிற ஏப்ரல் மாதம் முதல் அமலுக்கு வரும் என்றும் கர்நாடக சட்டசபை கூட்டு கூட்டத்தில் கவர்னர் தாவர்சந்த் கெலாட் அறிவித்தார்.
கன்னடத்தில் உரை
கர்நாடக சட்டசபையின் குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் மாதம் பெலகாவியில் 10 நாட்கள் நடைபெற்றது.அதைத்தொடர்ந்து சட்டசபை காலவரையறை இன்றி ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் கர்நாடக சட்டசபையின் கூட்டு கூட்டத்தொடர் 14-ந் தேதி (நேற்று) தொடங்கும் என்றும், இது ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் கவர்னர் உரையாற்றுவார் என்றும் அரசு அறிவித்தது. அதன்படி சட்டசபையின் கூட்டு கூட்டத்தொடர் பெங்களூரு விதான சவுதாவில் நேற்று காலை தொடங்கியது.
கூட்டம் தொடங்கியதும், சட்டசபை மற்றும் மேல்-சபை உறுப்பினர்களின் கூட்டு கூட்டத்தில் கவர்னர் தாவர்சந்த் கெலாட் உரையாற்றினார். இதற்காக அவர் காலை 10.55 மணிக்கு விதான சவுதாவுக்கு வந்தார். அவரை முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, மேலவை தலைவர் பசவராஜ் ஹொரட்டி, சபாநாயகர் காகேரி, சட்டசபை விவகாரத்துறை மந்திரி மாதுசாமி ஆகியோர் சபைக்கு அழைத்து வந்தனர்.
அவர் சட்டசபையில் சபாநாயகரின் இருக்கையில் அமர்ந்தார். தேசிய கீதம் இசைக்கப்பட்டதும், அவர் தனது உரையை தொடங்கினார். கன்னடத்தில் உரையை தொடங்கிய அவர் பிறகு இந்தி மொழியில் பேசினார். இந்த கூட்டத்தில் அவர் பேசியதாவது:-
நிலத்தடி நீர்மட்டம்
கிருஷ்ணா மேலணை திட்டத்தின் மூலம் ஆலமட்டி அணையின் உயரம் உயர்த்தப்படுகிறது. இதனால் 20 கிராமங்கள் நீரில் மூழ்கும் நிலை உள்ளது. அந்த 20 கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கு மறுவாழ்வு வசதிகள் ஏற்படுத்தி கொடுக்க முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது. பத்ரா மேலணை திட்டத்தை தேசிய திட்டமாக அறிவிக்குமாறு மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். இதற்கு அனைத்து அனுமதியும் கிடைத்துள்ளது. அதை தேசிய திட்டமாக அறிவிப்பது இறுதிக்கட்டத்தில் உள்ளது.
நிலத்தடி நீர்மட்டம் குறைவதை தடுக்க ஆழ்துளை கிணறு தோண்டும் எந்திரங்கள் கர்நாடக நிலத்தடி நீர் ஆணையத்தில் பதிவுசெய்ய வேண்டும் என்பதை கட்டாயப்படுத்தி உள்ளோம். தாலுகாக்களில் ஆழ்குழாய் கிணறுகளை தோண்ட மாவட்ட நிலத்தடி நீர் குழுவிடம் கட்டாயம் அனுமதி பெற வேண்டும். தொழில்முனைவோரை ஊக்கப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
கூடுதலாக ஒரு கிலோ அரிசி
பெங்களூரு-மும்பை, பெங்களூரு-சென்னை தொழில் வழிப்பாதையில் தொழிற்பேட்டைகளை அமைக்க அரசு முடிவு செய்துள்ளது. கனிம தொழில் சுரங்க நிறுவனங்களிடம் இருந்து மாவட்ட கனிம அறக்கட்டளை நிதிக்கு வரி வசூலிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு ரூ.690 கோடி வரி வசூலிக்கப்பட்டுள்ளது. அந்த நிதி கனிம தொழில் நடைபெறும் மாவட்டங்களில் வசிக்கும் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பணிகளுக்கு பயன்படுத்தப்படுகிறது.
இதற்காக ரூ.339 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் ரூ.66.45 கோடி கொரோனா தடுப்பு பணிகளுக்கு பயன்படுத்தப்பட்டது. அரசின் வேளாண் சந்தைகளில் விவசாயிகளிடம் வசூலிக்கப்பட்டு வந்த வரி 5 சதவீதத்தில் இருந்து 0.60 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இது விவசாயிகள் மீதான நிதிச்சுமையை குறைக்க உதவும். ரேஷன் கடைகளில் பி.பி.எல்.(வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள்) ரேஷன் அட்டைக்கு வீடுகளில் உள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கையின்படி மாதம் தலா 5 கிலோ அரிசி வழங்கப்படுகிறது. அத்துடன் கூடுதலாக தலா ஒரு கிலோ அரிசி வழங்கப்படும். இது வருகிற ஏப்ரல் மாதம் 1-ந் தேதி முதல் அமலுக்கு வரும். இதனால் அரசுக்கு கூடுதல் நிதிச்சுமை ஏற்படும்.
மின் இணைப்பு வசதி
ராமநகர் மாவட்டத்தில் 11.50 மெகாவாட் மின் உற்பத்தி நிலையம் அமைக்கப்படுகிறது. பெங்களூரு மாநகராட்சியால் வழங்கப்படும் திடக்கழிவுகள் மூலம் இந்த மின்சாரம் உற்பத்தி செய்யப்பட உள்ளது. இதற்கு ரூ.240 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கங்கா கல்யாண் திட்டத்தில் 18 ஆயிரத்து 569 ஆழ்குழாய் கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன. அதில் இதுவரை 10 ஆயிரத்து 534 ஆழ்குழாய் கிணறுகளுக்கு மின் இணைப்பு வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
கர்நாடகத்தில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்கள் மூலம் 15 ஆயிரத்து 374 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய கட்டமைப்பு வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன. சிவமொக்கா மாவட்டம் சிகாரிப்புரா தாலுகாவில் அக்கம்மாதேவியின் 20 அடி உயர சிலை அமைக்கப்படுகிறது. மேலும் அங்கு குழந்தைகள் பூங்கா, சுற்றுலா இல்லம் போன்றவை ரூ.9 கோடியில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அணை பாதுகாப்பு
18 ஆயிரத்து 777 எக்டேர் நிலப்பரப்பிற்கு சொட்டுநீர் பாசன வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. நடப்பு நிதி ஆண்டில் வேலை உறுதி திட்டத்தின் கீழ் 59.13 லட்சம் பேருக்கு வேலை வழங்கப்பட்டுள்ளது. 13.24 மனித வேலை நாட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதற்கு கூலியாக ரூ.3,769 கோடி பட்டுவாடா செய்யப்பட்டது. பெங்களூரு காற்றின் தரத்தை அறிய புதிதாக 7 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் காற்று மாசு அதிகமுள்ள பிற நகரங்களில் 4 மையங்களை அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
உலக வங்கி உதவியுடன் கர்நாடகத்தில் ரூ.1,500 கோடி செலவில் 58 அணைகள் மேம்படுத்தப்படும். அணைகளை கண்காணிக்கவும், அவற்றின உறுதி தன்மையை பாதுகாக்கவும் அணை பாதுகாப்பு அமைப்பை அரசு உருவாக்கியுள்ளது. அணை பாதுகாப்பு சட்டத்தின் கீழ் இந்த அமைப்பு ஏற்படுத்தப்பட்டு இருக்கிறது.
இவ்வாறு தாவர்சந்த் கெலாட் பேசினார்.
50 நிமிடங்கள் உரை
கவர்னர் அமர்ந்திருந்த இருக்கையின் இடதுபுறத்தில் மேலவை தலைவர் பசவராஜ் ஹொரட்டியும், வலதுபுறத்தில் சபாநாயகர் காகேரியும் அமர்ந்திருந்தனர். கவர்னர் 50 நிமிடங்கள் உரையாற்றினார். அதன் பிறகு அவர் அங்கிருந்து விடைபெற்று சென்றார். அவரை முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை உள்ளிட்டோர் அவரது கார் வரை சென்று வழியனுப்பிவிட்டு வந்தனர்.
Related Tags :
Next Story