‘தினத்தந்தி’ புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
‘தினத்தந்தி‘ புகார் பெட்டிக்கு 89390 48888 என்ற ‘வாட்ஸ்-அப்‘ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
குப்பை கூடமான ஏ.டி.எம்.
ஈரோடு சென்னிமலை ரோடு ரெயில்வே டீசல் செட் பகுதியில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் ஏ.டி.எம். மையம் உள்ளது. இந்த மையத்தில் ஏராளமான பொதுமக்கள் தங்கள் கணக்கில் இருந்து பணம் எடுத்து வருகிறார்கள். இங்கு ஏ.டி.எம். எந்திரம் மூலம் வழங்கப்படும் ரசீதுகளை அகற்றாமல் போட்டு உள்ளனர். ஆனால் குப்பைகளை அகற்றாத காரணத்தால் குப்பை கூடம்போல ஏ.டி.எம். உள்ளது. புழுதியால் சேர்ந்த குப்பையும் உள்ளே சென்றால் துர்வாடை வீசுகிறது. மையம் முழுவதும் சிலந்தி வலையாக உள்ளது. ஏ.டி.எம். மையத்தை தூய்மைப்படுத்த சம்பந்தப்பட்ட வங்கி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குருபரன், ஈரோடு.
தூர்வாரப்படுமா?
ஈரோடு சம்பத் நகரில் இருந்து அண்ணா தியேட்டர் செல்லும் பகுதியில் சாக்கடை கால்வாய் கடந்த பல மாதங்களாக தூர் வாரப்படாமல் உள்ளது. மேலும் அந்த பகுதியில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருவதால் அங்கு மது வாங்கும் குடிமகன்கள் சாக்கடை கால்வாய் ஓரமாக அமர்ந்து மதுவை அருந்திவிட்டு காலி பாட்டில் மற்றும் பிளாஸ்டிக் டம்ளர்களை சாக்கடை கால்வாய்களில் வீசி விட்டு செல்கின்றனர். இதனால் சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு தண்ணீர் செல்ல முடியாமல் தேங்கி நிற்கிறது. எனவே சாக்கடை கால்வாயை தூர்வார மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மெனிஷா, ஈரோடு.
கீழே விழுந்த வழிகாட்டி
அந்தியூர் அருகே உள்ள ஆலாம்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு செல்வதற்காக அரசு மேல்நிலைப்பள்ளி அருகே வழிகாட்டி பலகை வைத்திருந்தார்கள். ஆனால் அந்த பலகை கீழே விழுந்து ஒரு வருடமாகிவிட்டது. யாரும் அதை எடுத்து மீண்டும் அங்கு வைக்கவில்லை. ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு வரும் நோயாளிகளுக்கு வழிகாட்டி பலகை மிகவும் பயனுள்ளதாக இருந்தது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் அறிவிப்பு பலகையை மீண்டும் நிறுவுவார்களா?
கணபதி, புதுப்பாளையம்.
செடி-கொடிகள் ஆக்கிரமிப்பு
அந்தியூர் தவுட்டுப்பாளையத்தில் உள்ள டிரான்ஸ்பார்மரில் செடி, கொடிகள் சுற்றி ஆக்கிரமித்துள்ளது. மின்வாரிய பணியாளர்கள் வேலை சம்பந்தமாக டிரான்பார்மரில் ஏறினாலோ அல்லது யாராவது அதை தொட்டுவிட்டாலோ அசம்பாவிதம் ஏற்பட்டு விடும் எனவே சம்பந்தப்பட்ட மின்வாரிய பணியாளர்கள் டிரான்பார்மரில் சுற்றியுள்ள செடி-கொடிகளை அப்புறப்படுத்த வேண்டும்.
ரவீந்திரன், அந்தியூர்.
நோய் பரவும் அபாயம்
சென்னிமலை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்டது மேற்கு புதுப்பாளையம். இங்கு பல மாதங்களாக ரோட்டோரம் கொட்டப்பட்ட குப்பைகளை அகற்றாமல் இருப்பதால் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் நோய் பரவும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. இந்த பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் மற்றும் அரிசி ஆலை, கிறிஸ்தவ தேவாலயம் ஆகியவை உள்ளதால் உடனடியாக குப்பைகளை அகற்றி இனிமேல் குப்பைகளை கொட்டாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஜெயலட்சுமி, மேற்கு புதுப்பாளையம், சென்னிமலை.
Related Tags :
Next Story