சென்னை மாநகராட்சி தேர்தல் வாக்குச்சாவடிகள் அனைத்தும் தயார் - ககன்தீப் சிங் பேடி தகவல்


சென்னை மாநகராட்சி தேர்தல் வாக்குச்சாவடிகள் அனைத்தும் தயார் - ககன்தீப் சிங் பேடி தகவல்
x
தினத்தந்தி 15 Feb 2022 5:57 PM IST (Updated: 15 Feb 2022 5:57 PM IST)
t-max-icont-min-icon

சென்னை மாநகராட்சி தேர்தலில் வாக்குப்பதிவு நடத்த தேவையான வாக்குச்சாவடிகள் அனைத்தும் தயார் நிலையில் இருப்பதாக கமிஷனர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்தார்.

சென்னை,

பெருநகர சென்னை மாநகராட்சியின் 200 வார்டுகளுக்கான தேர்தல் வரும் 19-ந்தேதி நடைபெறுகிறது. வாக்குச்சாவடி மையங்களில் வாக்குப்பதிவுக்கு தேவையான 80 வகையான பொருட்கள் மற்றும் 9 வகையான கொரோனா தடுப்பு பொருட்களும் நேற்று சென்னையில் உள்ள 22 வினியோக மையத்துக்கு கொண்டுவரப்பட்டன. சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் கல்லூரியில் ஏற்படுத்தப்பட்டுள்ள ஒரு வினியோக மையத்தில் சென்னை மாநகராட்சி கமிஷனரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான ககன்தீப் சிங் பேடி நேற்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது கூடுதல் மாவட்ட தேர்தல் அதிகாரிகள் எம்.எஸ்.பிரசாந்த், எஸ்.ஷேக் அப்துல் ரஹ்மான் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.

பின்னர் நிருபர்களிடம் மாவட்ட தேர்தல் அதிகாரி ககன்தீப் சிங் பேடி கூறியதாவது:-

சென்னை மாநகராட்சியின் 200 வார்டுகளுக்கான தேர்தலில் வாக்காளர்கள் வாக்களிக்க 5 ஆயிரத்து 794 வாக்குச்சாவடிகள் உள்ளன. இந்த வாக்குச்சாவடிகளில் பொதுமக்கள் எந்தவொரு இடையூறுமின்றி வாக்களிக்க பாதுகாப்பு நடவடிக்கைகள், அடிப்படை வசதிகளான குடிநீர் மற்றும் கழிவறை, மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க ஏதுவாக சக்கர நாற்காலிகள் மற்றும் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்ற ஏதுவாக முககவசம், கையுறைகள், கிருமி நாசினிகள் மற்றும் முழு கவச உடைகள் போன்ற பல்வேறு விதமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

வாக்குப்பதிவுக்கு தேவையான சட்டமுறையான படிவங்கள், சட்டமுறை சாரா படிவங்கள், மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகள், அழியாத மை குப்பிகள் உள்ளிட்ட வாக்குப்பதிவு பொருட்கள், எழுதுப்பொருட்கள் மற்றும் படிவங்களுக்கான உறைகள் போன்ற 80 வகையான பொருட்களும் தயார்நிலையில் உள்ளன. இந்த பொருட்களும் வினியோக மையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன.

சென்னை மாநகராட்சி தேர்தலில் வாக்குப்பதிவுக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு, வாக்குச்சாவடிகள் அனைத்தும் தற்போது தயார் நிலையில் உள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் சென்னையில் இதுவரை 33 லட்சத்து 20 ஆயிரத்து 653 பேருக்கு ‘பூத் சிலிப்' வழங்கப்பட்டுள்ளதாகவும் ககன்தீப் சிங் பேடி தெரிவித்தார்.

Next Story