மது குடித்ததை கண்டித்ததால் ஆத்திரம்: தாயை குத்திக்கொன்ற மகன்


மது குடித்ததை கண்டித்ததால் ஆத்திரம்: தாயை குத்திக்கொன்ற மகன்
x
தினத்தந்தி 15 Feb 2022 6:16 PM IST (Updated: 15 Feb 2022 6:16 PM IST)
t-max-icont-min-icon

மது குடித்துவிட்டு வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றியதை கண்டித்த தாயை கத்தியால் குத்திக் கொன்ற மகன் கைது செய்யப்பட்டார்.

சென்னை,

திருவள்ளூரை அடுத்த வெள்ளவேடு அருகே உள்ள கூடப்பாக்கம் கலெக்டர் நகரை சேர்ந்தவர் ஆனந்தன் (வயது 60). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி மல்லிகா (54). இவர்களுடைய மகன்கள் ராமதாஸ் (30), ஜெயபால் (24).

இவர்களில் ராமதாசுக்கு திருமணம் ஆகிவிட்டது. இவர், பக்கத்து தெருவில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். கூலித்தொழிலாளியான ஜெயபாலுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. ஜெயபால் தனது தாய், தந்தையுடன் வசித்து வந்தார்.

ஜெயபால் அடிக்கடி மது குடித்துவிட்டு சரிவர வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றி வந்ததாக தெரிகிறது. இது தொடர்பாக கடந்த சில நாட்களாக ஜெயபாலுக்கும், அவருடைய தாய் மல்லிகாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்தது.

சம்பவத்தன்று ஜெயபால் வழக்கம்போல் மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து தாயுடன் ரகளையில் ஈடுபட்டார். அந்த நேரத்தில் ஆனந்தன் வீட்டில் இல்லை. அப்போது மல்லிகா, “ஏன் இவ்வாறு அடிக்கடி மது குடித்துவிட்டு வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றி வருகிறாய்?” என மகனை கண்டித்தார்.

இதனால் ஆத்திரம் அடைந்த ஜெயபால், வீட்டை விட்டு வெளியே சென்று விட்டார். பின்னர் மீண்டும் மது குடித்துவிட்டு வந்து தாயிடம் வாக்குவாதம் செய்தார். வாக்குவாதம் முற்றவே ஆத்திரம் அடைந்த ஜெயபால், வீட்டில் இருந்த காய்கறி நறுக்கும் கத்தியால் பெற்ற தாய் என்றும் பாராமல் மல்லிகாவை சரமாரியாக குத்திக்கொலை செய்தார். பின்னர் குடிபோதையில் தாயின் பிணத்துடன் இரவு முழுவதும் வீட்டிலேயே படுத்து கிடந்தார்.

மறுநாள் தனது தாயை பார்ப்பதற்காக வீட்டுக்கு வந்த மூத்த மகனான ராமதாஸ், வீட்டின் கதவு உள்பக்கம் தாழ்ப்பாள் போட்டு இருந்ததால் கதவை தட்டினார். கதவை திறந்த ஜெயபால், தனது சகோதரரை பார்த்ததும் குடிபோதையில் தனது தாயை கொலை செய்ததை கூறி அழுது புலம்பினார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த ராமதாஸ், இதுபற்றி வெள்ளவேடு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தாயை கத்தியால் குத்திக்கொன்ற ஜெயபாலை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Next Story