லாரி மோதி வடமாநில தொழிலாளி சாவு - தப்பி ஓடிய லாரி டிரைவருக்கு வலைவீச்சு


லாரி மோதி வடமாநில தொழிலாளி சாவு - தப்பி ஓடிய லாரி டிரைவருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 15 Feb 2022 6:27 PM IST (Updated: 15 Feb 2022 6:27 PM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூர் அருகே லாரி மோதியதில் வடமாநில தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவரை போலீசார் தேடிவருகின்றனர்.

திருவள்ளூர், 

திருவள்ளூரை அடுத்த மப்பேடு காந்தி பேட்டை பகுதியில் தனியார் கம்பெனி ஒன்று உள்ளது. இங்கே ஒடிசா மாநிலத்தை சேர்ந்த சானியா சாபர் (வயது 29) மற்றும் பிட்டு குமார் (25) ஆகியோர் வேலை செய்து வந்தனர். இவர்கள் நேற்று முன்தினம் வேலையை முடித்துவிட்டு மண்ணூர் பகுதியில் அமைந்துள்ள ஒரு ஓட்டலில் உணவு சாப்பிடுவதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றனர்.

அவர்கள் திருவள்ளூரை அடுத்த மப்பேடு சாலையில் சென்று கொண்டிருந்தபோது பின்னால் வேகமாக வந்த லாரி ஒன்று எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த சானியா சாபர் மீது லாரி சக்கரம் ஏறி இறங்கியதால் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். 

இந்த விபத்தில் காயம் அடைந்த பிட்டு குமார் திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவர் வண்டியை அங்கேயே விட்டு விட்டு தப்பி ஓடிவிட்டார். இந்த சம்பவம் குறித்து மப்பேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து சானியா சாபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பியோடிய லாரி டிரைவர் யார்? என்று விசாரித்து வருகிறார்கள்.

Next Story