அரசு பள்ளியில் வாக்கு எண்ணிக்கை மையம்: மாணவிகள் படிக்க மாற்று ஏற்பாடு
கோவில்பட்டியில் அரசு பள்ளியில் வாக்கு எண்ணிக்கை மையம் அமைத்ததால், மாணவிகள் படிக்க மாற்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
கோவில்பட்டி:
கோவில்பட்டி நகரசபை தேர்தலுக்கு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் வாக்கு எண்ணிக்கை மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் பள்ளி மாணவிகள் படிக்க தனியார் மண்டபத்தில் மாற்று ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
வாக்கு எண்ணும் மையம்
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19-ஆம் தேதி நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை 22- ஆம் தேதி நடக்கிறது. கோவில்பட்டி நகரசபையில் உள்ள 36 வார்டுகளில் பதிவாகும் வாக்குகள், கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் வைத்து எண்ணப் படுகின்றன. இதற்கான பணிகள் நேற்று தொடங்கியது. வாக்கு எண்ணும் மையம் அமைந்துள்ள கட்டிடத்தில் 6 முதல் 9-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவிகளுக்கான வகுப்பறை உள்ளது.
மாற்று ஏற்பாடு
இதை தொடர்ந்து அந்த மாணவிகளுக்கு வகுப்புகள் நடத்தவும், படிக்கவும் மாற்று ஏற்பாடு செய்யப்பட்டது. இதன்படி கோவில்பட்டி காந்தி மைதானம் அருகில் உள்ள தனியார் மண்டபத்திற்கு நேற்று காலையில் 6-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவிகள் அழைத்துச் செல்லப்பட்டு, அங்கு வைத்து பாடங்கள் நடத்தப் பட்டன.
அதிகாரி ஆய்வு
நேற்று தூத்துக்குடி மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி பாலதண்டாயுத பாணி தனியார் மண்டபத்திற்கு வந்தார். மாணவிகளுக்கு பாடம் நடத்துவதை பார்வையிட்டார். பள்ளி தலைமை ஆசிரியை ஜெயலதா மற்றும் ஆசிரியர்களிடம் மாணவிகளுக்கு அடிப்படை வசதிகள் தொடர்பாக ஆலோசனை நடத்தினார். பின்னர் பள்ளி வளாகத்தில் 10 வகுப்பறைகள் கட்டப்பட்டு முடிவடையும் தருவாயில் இருப்பதால், மாணவிகள் படிக்க வசதியாக இன்று (புதன்கிழமை) முதல் அங்கு வைத்து இந்த மாணவிகளுக்கு பாடம் நடத்துவதற்கு உத்தரவிட்டார். இதன்படி இன்று முதல் மாணவிகள் பள்ளி வளாகத்தில் உள்ள புதிய வகுப்பறை கட்டிடத்தில் வைத்து மாணவிகளுக்கு பாடம் நடத்தப்படும் என்று தெரிவிக்கப் பட்டது.
Related Tags :
Next Story