தபால் ஓட்டு போட 467 பேர் விண்ணப்பம்
தூத்துக்குடி மாநகராட்சியில் தபால் ஓட்டு போட 467 பேர் விண்ணப்பித்து உள்ளனர்
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாநகராட்சியில் தபால் ஓட்டு போடுவதற்காக இதுவரை 467 பேர் விண்ணப்பித்து உள்ளனர். தபால் ஓட்டுபோடுவதற்கு வசதியாக மாநகராட்சி அலுவலகத்தில் ஓட்டுப்பெட்டி வைக்கப்பட்டது.
உள்ளாட்சி தேர்தல்
தூத்துக்குடி மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளுக்கான உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந் தேதி நடக்கிறது. மாநகராட்சி பகுதியில் 319 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. இதில் பணியாற்றுவதற்காக வாக்குச்சாவடி அலுவலர்கள் சுமார் 1000 பேர் தேர்வு செய்யப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்ட பிறகு, வாக்குச்சீட்டு அச்சடிக்கப்பட்டு வாக்குப்பதிவு எந்திரங்களில் பொருத்தும் பணி மேற்கொள்ளப்பட்டது.
தபால் ஓட்டு
அதே நேரத்தில் தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள் வாக்களிப்பதற்கு வசதியாக தபால் வாக்குச்சீட்டுகளும் வார்டு வாரியாக அச்சடிக்கப்பட்டன. தொடர்ந்து தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு தபால் ஓட்டுக்கான படிவங்கள் வழங்கப்பட்டு வந்தன. அதனை பூர்த்தி செய்து கொடுத்தவர்களுக்கு தபால் ஓட்டுக்கள் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் இதுவரை 467 பேர் தபால் வாக்குச்சீட்டு பெற்று உள்ளனர். அவர்கள் தபால் ஓட்டை போடுவதற்கு வசதியாக மாநகராட்சி அலுவலகத்தில் தபால் வாக்குப்பெட்டி அமைக்கப்பட்டு உள்ளது.
வாக்குப்பெட்டி
தூத்துக்குடி மாநகராட்சி தேர்தல் நடத்தும் அலுவலர் சாருஸ்ரீ தலைமையில் வாக்குப்பெட்டி தயார் செய்யப்பட்டது. இது வெறும் பெட்டி என்பதை உறுதி படுத்தும் வகையில் அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் திறந்து காண்பிக்கப்பட்டது. பின்னர் அவர்கள் முன்னிலையிலேயே வாக்குப் பெட்டிக்கு சீல் வைக்கப்பட்டது. நிகழ்ச்சியில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் அதிகாரிகள், அரசியல் கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story