அமெரிக்கன் படைப்புழு தாக்குதலால் கரும்பு பயிர்கள் பாதிப்பு
விழுப்புரம் மாவட்டத்தில் அமெரிக்கன் படைப்புழு தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ள கரும்பு பயிர்களை வேளாண் விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
விழுப்புரம்,
தமிழ்நாட்டின் சர்க்கரை உற்பத்தியில் பெரும் பங்களிப்பை வழங்கும் அளவிற்கு விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் அதிகளவில் கரும்பு பயிரிட்டு வருகின்றனர். இதன் காரணமாக தமிழகத்தின் சர்க்கரை களஞ்சியம், சர்க்கரை மாவட்டம் என பல்வேறு சிறப்பு பெயர்களை கொண்டு விழுப்புரம் மாவட்டம் கரும்பு உற்பத்தியில் சிறந்து விளங்கி வருகிறது.
இத்தகைய சூழ்நிலையில் உணவு பயிர்களை தாக்கி மிகப்பெரிய சேதத்தை விளைவிக்கக்கூடிய அமெரிக்கன் படைப்புழுக்கள் தற்போது விழுப்புரம் மாவட்டத்தில் கரும்பு பயிர்களை முதல்முறையாக தாக்கியுள்ளது. வட அமெரிக்காவை பூர்வீகமாக கொண்ட இந்த புழுக்கள் பச்சை மற்றும் பழுப்பு நிறங்களில் பெரியளவில் காணப்படுகிறது. தமிழகத்தில் இதுவரை தானிய வகைகளான சோளம், உளுந்து, பாசிப்பயிறு, அவரை உள்ளிட்ட பயிர்களை மட்டுமே தாக்கி வந்த இந்த வகையிலான அமெரிக்கன் படைப்புழுக்கள் தற்போது தமிழகத்தில் முதல் முறையாக கரும்பு பயிர்களை தாக்கியுள்ளதால் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கரும்பு விவசாயிகள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
நஷ்டம்
விழுப்புரம் அருகே முண்டியம்பாக்கம், ஒரத்தூர், காணை, காணைக்குப்பம், பெரும்பாக்கம், ஆயந்தூர், ஆற்காடு, கஞ்சனூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களிலும் சுமார் 200-க்கும் மேற்பட்ட ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த கரும்பு பயிர்களில் அமெரிக்கன் படைப்புழுக்கள் தாக்கியுள்ளது. பயிரிடப்பட்ட 30 முதல் 40 நாட்களிலேயே கரும்பு பயிர்களை தாக்கும் இந்த அமெரிக்கன் படைப்புழுக்கள் கரும்பு சோலையை அரித்து நாசம் செய்து விடுகிறது.
இதனால் கரும்பு பயிர்கள் வளர்ச்சி அடையாமல் நாசமாகி விடுகிறது. ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் வரை செலவு செய்து கரும்பு பயிரிட்டுள்ள விவசாயிகளுக்கு இந்த அமெரிக்கன் படைப்புழு தாக்குதல் பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
வேளாண் விஞ்ஞானிகள் ஆய்வு
இதுகுறித்து கரும்பு விவசாயிகள் அளித்த புகாரின்பேரில் தமிழ்நாடு வேளாண் அறிவியல் கழக விஞ்ஞானிகளை கொண்ட குழுவினர் நேற்று விழுப்புரம் மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்டனர். தமிழ்நாடு வேளாண் அறிவியல் கழக விஞ்ஞானிகளான டாக்டர் ஸ்ரீதர், டாக்டர் மாலதி மற்றும் விழுப்புரம் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் ரமணன் ஆகியோர் கொண்ட குழுவினர், காணைக்குப்பம் கிராமத்தில் அமெரிக்கன் படைப்புழு தாக்குதலுக்குள்ளான கரும்பு பயிர்களை நேரில் சென்று பார்வையிட்டு அமெரிக்கன் படைப்புழுக்களின் வளர்ச்சி மற்றும் வீரியம் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.
இதையடுத்து கரும்பு பயிர்களை தாக்கியுள்ள அமெரிக்கன் படைப்புழுக்களை அழிப்பது மற்றும் கட்டுப்படுத்துவது குறித்து விவசாயிகளுக்கு வேளாண் விஞ்ஞானிகள் உரிய ஆலோசனைகளை வழங்கினர். இந்த வகையிலான அமெரிக்கன் படைப்புழுக்கள் மிக வேகமாக பரவும் தன்மை கொண்டதால் அனைத்து விவசாயிகளும் தங்கள் விளைநிலங்களில் உள்ள பயிர்களுக்கு ஒரே நேரத்தில் பூச்சிக்கொல்லி மருந்து அடித்தால் மட்டுமே இதனை அழிக்க முடியும் என வேளாண் விஞ்ஞானிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
பூச்சிக்கொல்லி மருந்தை வழங்க நடவடிக்கை
மேலும் அமெரிக்கன் படைப்புழுக்களை அழிக்க உதவும் பூச்சிக்கொல்லி மருந்தின் விலை மிக அதிகம் என்பதால் அந்த பூச்சிக்கொல்லி மருந்துகளை மொத்தமாக முண்டியம்பாக்கத்தில் உள்ள ராஜஸ்ரீ சர்க்கரை ஆலை நிர்வாகம் கொள்முதல் செய்து குறைந்த விலையில் கரும்பு விவசாயிகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட வேளாண் இணை இயக்குனர் ரமணன் தெரிவித்தார். இந்த ஆய்வின்போது வேளாண்மை உதவி இயக்குனர் பாலசுப்பிரமணியன், காணை வட்டார வேளாண்மை அலுவலர் வரதராஜன், உதவி வேளாண்மை அலுவலர் பிரபாகரன், தொழில்நுட்ப மேலாளர் சந்திரசேகர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story