கள்ளக்குறிச்சி நகரசபை தலைவர் பதவியை கைப்பற்ற தி மு க அ தி மு க வினர் தீவிர ஓட்டுவேட்டை
கள்ளக்குறிச்சி நகரசபை தலைவர் பதவியை கைப்பற்ற தி மு க அ தி மு க வினர் தீவிர ஓட்டுவேட்டை
கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி நகரசபை
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந் தேதி நடைபெறவுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் தலைநகரமாக உள்ள கள்ளக்குறிச்சி நகராட்சியில் 21 வார்டுகள் உள்ளன. தேர்தலுக்காக 46 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 46,890 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். நகராட்சி தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் 21 பேர், தி.மு.க. 18 பேர், காங்கிரஸ், விடுதலை சிறுத்தை கட்சி, கம்யூனிஸ்டு ஆகிய கட்சிகள் தலா ஒருவர், பா.ஜ.க. 7 பேர், பா.ம.க. 4 பேர், நாம் தமிழர் கட்சி 12 பேர், தே.மு.தி.க. 3 பேர், அ.ம.மு.க. ஒருவர், ஆம் ஆத்மி கட்சி ஒருவர் மற்றும் பல்வேறு கட்சிகள், சுயேச்சைகள் என மொத்தம் 89 பேர் போட்டியிடுகின்றனர். தேர்தலுக்கு இன்னும் 2 நாட்களே உள்ளதால் ஓட்டு வேட்டையில் கட்சியினர், வேட்பாளர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
தீவிர ஓட்டு வேட்டை
பேரூராட்சியாக இருந்து நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட பின்னர் கள்ளக்குறிச்சி நகராட்சியில் நகர மன்ற தலைவர் பதவியை தொடர்ந்து 2 முறை அ.தி.மு.க கைப்பற்றியது. இந்த நிலையில் கடந்த 2019-ம் ஆண்டு விழுப்புரம் மாவட்டத்தை இரண்டாக பிரித்து கள்ளக்குறிச்சியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டமாக கள்ளக்குறிச்சி உருவானது. தனி மாவட்டமாக உருவான பிறகு நடைபெறும் முதல் தேர்தல் என்பதாலும், மாவட்டத்தின் தலைநகரமாக இருப்பதாலும், ஆளும் கட்சியாக இருப்பதாலும் கள்ளக்குறிச்சி நகராட்சி தேர்தலில் தலைவர் பதவியை கைப்பற்ற தி.மு.க.வினர் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், கட்சியின் முக்கிய பிரமுகர்களும் அரசின் சாதனைகளையும், நிறைவேற்றப்பட உள்ள நலத்திட்டங்களையும் பொதுமக்களிடம் எடுத்துக்கூறி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
3-வது முறையாக
அதேபோல் நகரசபை தலைவர் பதவியை ஏற்கனவே 2 முறை கைப்பற்றிய அ.தி.மு.க.வும் 3-வது முறையாக தலைவர் பதவியை கைப்பற்ற தீவிரம் காட்டி வருகிறது. இதற்காக அக்கட்சியின் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர், மாவட்ட செயலாளர், நகர செயலாளர் மற்றும் நிர்வாகிகள் கடந்த 10 ஆண்டுகளில் அ.தி.மு.க அரசு செய்த சாதனைகளை மக்களிடம் எடுத்துக் கூறி தீவிர ஓட்டு வேட்டை நடத்தி வருகிறார்கள். இவர்களை தவிர பா.ஜ.க., பா.ம.க., நாம்தமிழர், தே.மு.தி.க. அ.ம.மு.க. உள்ளிட்ட கட்சிகளும் கள்ளக்குறிச்சி நகர சபையை பிடிப்பதற்காக தீவிர களப்பணியாற்றி வருகின்றனர். இதனால் கள்ளக்குறிச்சி நகராட்சி தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. என்றாலும் நகரசபை தலைவர் பதவியை கைப்பற்றுவது யார்? என்பது வருகிற 22-ந் தேதி தெரிந்து விடும்.
Related Tags :
Next Story