கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பதற்றமான வாக்குச்சாவடிகளில் போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பதற்றமான வாக்குச்சாவடிகளில் போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு செய்தார்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வருகிற 19-ந் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. ஓசூர் மாநகராட்சி, கிருஷ்ணகிரி நகராட்சி மற்றும் ஊத்தங்கரை, பர்கூர், நாகோஜனஅள்ளி, காவேரிப்பட்டணம், கெலமங்கலம் மற்றும் தேன்கனிக்கோட்டை ஆகிய 6 பேரூராட்சிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. இதில் வாக்காளர்கள் வாக்களிக்க மொத்தம் 424 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 66 வாக்குச்சாவடிகள் பதற்றமான வாக்குச்சாவடிகள் என கண்டறியப்பட்டுள்ளன.
இந்த நிலையில் நேற்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வி பதற்றமான வாக்குச்சாவடிகளை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதன்படி, கிருஷ்ணகிரி கோட்டை பகுதியில் உள்ள நகராட்சி உருது பெண்கள் நடுநிலைப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தை அவர் பார்வையிட்டார். அப்போது அங்கு அமைக்கப்பட்டுள்ள சி.சி. டி.வி. கேமராக்கள் உள்ளிட்டவைகளை ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு விவேகானந்தன், துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயராகவன், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் கபிலன், முத்தமிழ்செல்வராசு, சப்-இன்ஸ்பெக்டர் சிவசந்தர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story