தர்மபுரி அரசு கலைக்கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் கலெக்டர் ஆய்வு


தர்மபுரி அரசு கலைக்கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 15 Feb 2022 10:58 PM IST (Updated: 15 Feb 2022 10:58 PM IST)
t-max-icont-min-icon

தர்மபுரி அரசு கலைக்கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தை கலெக்டர் திவ்யதர்சினி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தர்மபுரி:
தர்மபுரி அரசு கலைக்கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தை கலெக்டர் திவ்யதர்சினி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்
தர்மபுரி மாவட்டத்தில் தர்மபுரி நகராட்சி மற்றும் 10 பேரூராட்சிகளுக்கு வருகிற 19-ந்தேதி தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் மாவட்டம் முழுவதும் ஒரே நாளில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் வேட்பாளர்கள் பெயர் மற்றும் சின்னங்கள் பொருத்தும் பணி அந்தந்த வார்டுகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
தர்மபுரி நகராட்சி, 10 பேரூராட்சிகளில் பதிவாகும் வாக்குகள் தர்மபுரி அரசு கலைக்கல்லூரியில் எண்ணப்படுகிறது. இந்த வாக்கு எண்ணும் மையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகளை மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான திவ்யதர்சினி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். 
உத்தரவு
வாக்கு எண்ணும் மையத்தில் தடுப்பு வேலிகள் அமைத்தல் மற்றும் பாதுகாப்பு பணிகள், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணிகள், வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் வாக்கு எண்ணும் இடங்களுக்கு செல்ல ஏதுவாக தனித்தனி பாதைகள் அமைத்தல் உள்ளிட்ட பணிகளை கலெக்டர் பார்வையிட்டார். இந்த பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.
இந்த ஆய்வின் போது துணை போலீஸ் சூப்பிரண்டு வினோத், பேரூராட்சிகள் உதவி இயக்குனர் குருராஜன், தேர்தல் நடத்தும் அலுவலர்கள்,  தொடர்புடைய அலுவலர்கள், பணியாளர்கள் உடனிருந்தனர்.

Next Story