தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டி
மின் கம்பம் மாற்றப்படுமா?
புத்தளம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட உசரவிளையில் அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு வடக்கு பகுதியில் சாலையின் திருப்பத்தில் அமைக்கப்பட்டுள்ள ஒரு மின்கம்பம் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து விழுந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிந்த வண்ணம் எப்போது வேண்டுமானாலும் முறிந்து விழும் நிலையில் காணப்படுகிறது. இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் அச்சத்துடனேயே அந்த பகுதியை கடந்து செல்கிறார்கள். எனவே, சேதமடைந்த மின்கம்பத்தை அகற்றி விட்டு புதிய கம்பத்தை நடுவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-அ.கிருஷ்ணகுமார், உசரவிளை.
எரியாத விளக்குகள்
துவரங்காட்டில் இருந்து முக்கடல் அணைக்கு செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையில் காரியாங்கோணம், மாவிளை ஆகிய பகுதிகளில் சாலையோரம் அமைக்கப்பட்டுள்ள மின்கம்பங்களில் விளக்குகள் பழுதடைந்து எரியாமல் உள்ளது. இதனால், தோட்ட வேலைக்கு சென்று திரும்பும் தொழிலாளிகள் மற்றும் சுற்றுலா பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். எனவே, பழுதடைந்த விளக்குகளை அகற்றி விட்டு புதிய விளக்குகளை அமைத்து எரியவைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-நிர்மல், திட்டுவிளை.
சுகாதார சீர்கேடு
நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட 46-வது வார்டில் வட்டக்கரை பாலத்தில் இருந்து வல்லன்குமாரன்விளைக்கு ஒரு சாலை செல்கிறது. இந்த சாலையில் வண்ணான்விளை பகுதியில் அனந்தன்கால்வாய் ஓடுகிறது. இந்த கால்வாயில் கடந்த சில நாட்களாக கழிவுகள் மற்றும் இறந்த கோழி, நாய், ஆடு ஆகியவற்றையும் சிலர் வீசிச் செல்கின்றனர். இதனால், கழிவுகள் தேங்கி தண்ணீர் மாசடைந்து துர்நாற்றம் வீசுவதுடன் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, கால்வாயில் தேங்கியுள்ள கழிவுகளை அகற்றி மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-வீரசூர பெருமாள், வண்ணான்விளை.
விபத்து அபாயம்
நாகர்கோவில் வேப்பமூட்டில் இருந்து அண்ணா பஸ்நிலையத்துக்கு செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையில் மாநகராட்சி பூங்காவை அடுத்து திருப்பத்தில் சாலையில் குழாய்கள் பதிப்பதற்காக பள்ளம் தோண்டப்பட்டு பணிகள் நிறைவடைந்துள்ளது. ஆனால், சாலையை முறையாக சீரமைக்காததால் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாவதுடன் விபத்தில் சிக்கும் அபாயமும் ஏற்பட்டு வருகிறது. எனவே, சாலையை முறையாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராசிக், நாகர்கோவில்.
பாதுகாப்பு வசதி தேவை
நாகர்கோவில்-திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் மார்த்தாண்டம் பகுதியில் மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. மார்த்தாண்டம் பஸ்நிலையத்தில் இருந்து மேம்பாலத்துக்கு ஒரு இணைப்பு சாலை அமைக்கப்பட்டுள்ளது. இணைப்பு சாலை வழியாக வரும் வாகனங்கள் தேசிய நெடுஞ்சாலையை அடைந்து திரும்பும்போது பாதுகாப்பு வசதிகள் செய்யப்படவில்லை. இதனால், வேகமாக வரும் சக வாகனங்களால் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, வாகன ஓட்டிகள் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த பகுதியில் சாலையில் பாதுகாப்பு குறியீடுகள் வரைந்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஜஸ்டின் ஜாஸ்ப்பர், மார்த்தாண்டம்.
காட்சி பொருளான விளக்குகள்
நாகர்கோவிலின் முக்கிய பகுதியாக வடசேரி அண்ணாசிலை சந்திப்பு உள்ளது. நெல்லை உள்ளிட்ட வெளியூர்களில் இருந்து வரும் வாகனங்கள் இந்த சந்திப்பை கடந்து தான் பிற பகுதிகளுக்கு செல்ல வேண்டும். இந்த சந்திப்பில் அமைக்கப்பட்டுள்ள உயர் மின்கோபுரத்தில் 8 விளக்குகள் உள்ளன. ஆனால், அதில் ஒரு விளக்கு மட்டுமே எரிகிறது. இதனால், இரவு நேரம் அந்த வழியாக வரும் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். எனவே, வாகன ஓட்டிகள் நலன் கருதி பழுதடைந்த விளக்குகளை அகற்றி விட்டு புதிய விளக்குகளை அமைத்து எரியவைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-அருண், நாகர்கோவில்.
Related Tags :
Next Story