ஓட்டலுக்குள் புகுந்து உரிமையாளரை வெட்டிக்கொன்ற கும்பல்
அண்ணன்-தம்பி நடத்தி வந்த ஓட்டலுக்குள் புகுந்த 10 பேர் கும்பல், தம்பியை வெட்டிக்கொன்றது. அப்போது தடுக்க வந்த அண்ணனுக்கும் சரமாரி வெட்டு விழுந்தது.
சிவகங்கை,
அண்ணன்-தம்பி நடத்தி வந்த ஓட்டலுக்குள் புகுந்த 10 பேர் கும்பல், தம்பியை வெட்டிக்கொன்றது. அப்போது தடுக்க வந்த அண்ணனுக்கும் சரமாரி வெட்டு விழுந்தது.
இந்த பயங்கர சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
ஓட்டலில் புகுந்து வெட்டிய கும்பல்
சிவகங்கை ராமசாமி நகரை சேர்ந்தவர் இளங்கோ (வயது 39). இவருடைய தம்பி மணிவண்ணன் (28). இவர்கள் இருவரும் சேர்ந்து சிவகங்கை பகுதியில் மேலூர் ரோட்டில் ஓட்டல் ஒன்றை திறந்துள்ளனர். நேற்று முன்தினம் இரவு 10 மணி அளவில் அண்ணன்-தம்பி இருவரும் அந்த ஓட்டலில் இருந்தனர்.
அப்போது 4 மோட்டார் சைக்கிள்களில் வந்த 10 பேர் கொண்ட கும்பல், பயங்கர ஆயுதங்களுடன் ஓட்டலுக்குள் புகுந்தனர். அவர்களை பார்த்து சுதாரிப்பதற்குள் திடீரென்று மணிவண்ணனை வாளால் வெட்டினார்கள். இதை பார்த்து தடுக்க வந்த அவருடைய அண்ணன் இளங்கோவிற்கும் வெட்டு விழுந்தது. பின்னர் அந்த கும்பல் தப்பிச் சென்றுவிட்டது.
ஒருவர் சாவு
ரத்த வெள்ளத்தில் கிடந்த அண்ணன்-தம்பியை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே மணிவண்ணன் பரிதாபமாக இறந்தார்.
இளங்கோ ஆபத்தான நிலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். கொலை செய்யப்பட்ட மணிவண்ணன் திருமணம் ஆகாதவர். இவர் சிவகங்கை காந்தி வீதியில் ஜவுளிக்கடையும் நடத்தி வந்தார். படுகாயம் அடைந்த இளங்கோவிற்கு திருமணமாகி 3 மாதம் ஆகிறது. இவர் ஏற்கனவே சிவகங்கை கோபால் தெருவில் இறைச்சி விற்பனை கடையும் நடத்தி வருகிறார்.
போலீஸ் சூப்பிரண்டு விசாரணை
இந்த பயங்கர சம்பவம் பற்றிய தகவல் கிடைத்ததும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார், சிவகங்கை துணை சூப்பிரண்டு பால்பாண்டி, நகர் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார், சப்-இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி, ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்,
போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், கடந்த ஆண்டு தீபாவளி அன்று இளங்கோவின் உறவினரான விஷ்ணு என்பவர் சிவகங்கையில் பட்டாசு கடை வைத்திருந்தார், அப்போது புதுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சக்திவேல் தன்னுடைய நண்பர்களுடன் கடைக்கு வந்து பட்டாசு வாங்கிக் கொண்டு பணம் தராமல் தகராறு செய்தார்களாம்.
இந்த நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு விஷ்ணுவும், மணிவண்ணனும் மோட்டார் சைக்கிளில் மீனாட்சி நகரில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றனர், அப்போது அந்த வழியில் வந்த சக்திவேல், முத்துப்பாண்டி, மைக்கேல், உள்ளிட்டவர்கள் விஷ்ணுவுடன் தகராறு செய்தார்களாம், இந்த சம்பவத்தின்போது மணிவண்ணன், சக்திவேலை அடித்து விட்டாராம்.
இதில் ஏற்பட்ட முன்விரோதத்தில்தான் நேற்று முன்தினம் இரவு சக்திவேல் தலைமையில் வந்த கும்பல் அண்ணன்-தம்பி இருவரையும் ஓட்டலுக்குள் புகுந்து வாளால் வெட்டியதும், இதில் மணிவண்ணன் கொல்லப்பட்டதும் தெரிய வந்தது.
தனிப்படை
இது தொடர்பாக சிவகங்கை நகர் போலீசார், சக்திவேல் (27), புலி கார்த்திக் (26), மைக்கேல் (27), வெற்றிவேல் (25) உள்பட 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவத்தில் ெதாடர்புடையவர்களை பிடிப்பதற்காக தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்ற கோணத்திலும் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story