குலசேகரம் அருகே அணைப்பகுதியில் சாரல் மழை
குமரி மாவட்டத்தில் அணை பகுதிகளில் சாரல் மழை பெய்தது
குலசேகரம்,
குமரி மாவட்டத்தில் தற்போது அதிகாலை நேரங்களில் மிதமான குளிரும், பகல் நேரங்களில் கடுமையான வெயிலும் அடித்து வருகிறது. கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு மாவட்டத்தில் திடீரென பரவலாக மழை பெய்தது. அதன்பின்பு அவ்வப்போது ஆங்காங்கே சாரல் மழை பெய்து வருகிறது.
நேற்று மதியம் வரை மாவட்டம் முழுவதும் வழக்கம் போல் கடுமையான வெயில் அடித்தது. மாலையில் குலசேகரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வானில் கார் மேகங்கள் சூழ்ந்து மழை பெய்ய தொடங்கியது.
குறிப்பாக பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு ஆகிய அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகள் மற்றும் மலையோர பகுதிகளில் சாரல் மழை பெய்தது. இதுபோல், திற்பரப்பு, சுருளகோடு, தடிக்காரன்கோணம், கீரிப்பாறை, மாறாமலை, பாலமோர், திருவட்டார் போன்ற பகுதிகளிலும் சாரல் மழை பெய்தது.
தற்போது அனைத்து அணைகளிலும் போதுமான அளவில் தண்ணீர் உள்ளதால் பாசனப் பகுதிகளில் முழு அளவில் தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. அதே வேளையில் பாசன வசதியில்லாத கரையோரப் பகுதிகளில் விவசாயிகள் மோட்டாரைப் பயன்படுத்தி தண்ணீர் பாய்ச்சி வருகின்றனர். இந்த நிலையில் மாவட்டத்தில் அவ்வப்போது பெய்து வரும் சாரல் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Related Tags :
Next Story