மனைவி தற்கொலையில் ெஜயிலில் அடைக்கப்பட்டவர் ‘திடீர்’ சாவு


மனைவி தற்கொலையில் ெஜயிலில் அடைக்கப்பட்டவர் ‘திடீர்’ சாவு
x
தினத்தந்தி 16 Feb 2022 12:14 AM IST (Updated: 16 Feb 2022 12:14 AM IST)
t-max-icont-min-icon

மனைவி தற்கொலை செய்த வழக்கில் கைதாகி வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்ட வாலிபர் திடீரென இறந்தார். மருத்துவமனையில் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் மறியலில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

வேலூர்

மனைவி தற்கொலை செய்த வழக்கில் கைதாகி வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்ட வாலிபர் திடீரென இறந்தார். மருத்துவமனையில் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் மறியலில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
 
சிறையில் அடைப்பு

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பகுதியில் உள்ள சாமியார் மடத்தை சேர்ந்தவர் ராஜாமணி (வயது 34). இவருக்கும் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை சேர்ந்த முரளி என்பவரது மகள் நந்தினிக்கும் (26) கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. கணவன்-மனைவி இடையே குடும்ப பிரச்சினையில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

இதனால் மனவேதனை அடைந்த நந்தினி கடந்த சனிக்கிழமை வீட்டில் உள்ள ஒரு அறையில் தூக்கில் பிணமாக தொங்கினார்.
மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக ஆம்பூர் டவுன் போலீசில் அவரது தந்தை முரளி புகார் அளித்தார். மேலும் போலீஸ் நிலையத்தை அவரது உறவினர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து ராஜாமணியை கைது செய்து ஆம்பூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பின்னர் கோர்ட்டு உத்தரவின்பேரில் நேற்று முன்தினம் இரவு ராஜாமணியை வேலூர் ஜெயிலில் போலீசார் அடைத்தனர்.

திடீர் மூச்சு திணறல்

இந்த நிலையில் வேலூர் ஜெயிலில் இருந்த ராஜாமணிக்கு நேற்று காலை திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. ஜெயில் டாக்டர்கள் அவருக்கு முதலுதவி அளித்தனர். உடனடியாக அவரை அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே ராஜாமணி இறந்து விட்டார். இது தொடர்பாக பாகாயம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இதுதொடர்பாக மருத்துவமனைக்கு சென்று வேலூர் மாஜிஸ்திரேட்டு விசாரணை நடத்தினார்.

உறவினர்கள் மறியல் முயற்சி

இந்த நிலையில் ராஜாமணியின் உடல் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் நேற்று மாலை பிரேத பரிசோதனை செய்து முடிக்கப்பட்டது. ராஜாமணியின் குழந்தையை அவரது மனைவியின் உறவினர்கள் அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது. அந்த குழந்தையை ஒப்படைத்தால் தான் உடலை வாங்குவோம் எனக்கூறி உடலை வாங்க மறுத்து அவரது உறவினர்கள் வேலூர்- ஆரணி செல்லும் சாலையில் மறியலில் ஈடுபட முயற்சித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

அப்போது அங்கிருந்த போலீசார் அவர்களை சமரசம் செய்தனர். இதனால் உறவினர்கள் ராஜாமணியின் உடலை வாங்கவில்லை. இதனால் அரசு மருத்துவமனையில் தொடர்ந்து பதற்றம் நிலவுகிறது.

Next Story