கனமழையினால் சாய்ந்த 15 ஆயிரம் ஏக்கர் நெற்கதிர்கள் முளைத்தன


கனமழையினால் சாய்ந்த 15 ஆயிரம் ஏக்கர் நெற்கதிர்கள் முளைத்தன
x
தினத்தந்தி 16 Feb 2022 12:18 AM IST (Updated: 16 Feb 2022 12:18 AM IST)
t-max-icont-min-icon

கொள்ளிடம் பகுதியில் கனமழையினால் சாய்ந்த 15 ஆயிரம் ஏக்கர் நெற்கதிர்கள் முளைத்து விட்டன. எனவே நிவாரணம் வழங்க அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கொள்ளிடம்:
கொள்ளிடம் பகுதியில் கனமழையினால் சாய்ந்த 15 ஆயிரம் ஏக்கர் நெற்கதிர்கள் முளைத்து விட்டன. எனவே நிவாரணம் வழங்க அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நெற்கதிர்கள் முளைக்க தொடங்கியது
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் பகுதியில சமீபத்தில் பெய்த கனமழையுடன் சேர்ந்து பலத்த காற்றும் வீசியது. இதனால் கொள்ளிடம் பகுதியில் சம்பா நெற்பயிர்கள் அறுவடை செய்யும் பணி ஸ்தம்பித்தது. 
மேலும் கொள்ளிடம் அருகே உள்ள வழுதலைகுடி, உமையாள்பதி, மாதிரவேளூர், பெரம்பூர், சென்னியநல்லூர், பூங்குடி, குன்னம் ஆகிய கிராமங்களில் 15 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் அறுவடைக்கு தயாரான நிலையில் மழையினால் வயலில் சாய்ந்தன.இதனால் அறுவடை செய்யும் போது முழுமையான மகசூல் கிடைப்பது அரிதாகி விட்டது. மழைநீர் சரியாக வடியாததால் சாய்ந்த நெற்கதிர்கள் முளைக்க தொடங்கி விட்டது.
நிவாரணம் வழங்க கோரிக்கை
சாய்ந்த நெற்கதிர்கள் அறுவடைக்கு பிறகு ஈரப்பதம் அதிகம் இருப்பதால் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் மிகவும் வேதனையில் இருந்து வருகின்றனர்.நெற்பயிர்கள் சாய்ந்து நெல்மணிகள் முளைத்து விட்டதால் பெரும் நஷ்டத்தை விவசாயிகள் சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே பாதிக்கப்பட்ட வயல்களை கணக்கீடு செய்து உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள், அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
சீர்காழி
சீர்காழி தாலுகாவிற்கு உட்பட்ட திருமுல்லைவாசல், தாழந்தொண்டி, வழுதக்குடி, வடகால், எடமணல், கடவாசல், தில்லைவிடங்கன், திட்டை, அத்தியூர், விளந்திட சமுத்திரம், காரைமேடு, தென்னலக்குடி, எடக்குடி வடபாதி, கதிராமங்கலம், கன்னியாகுடி, கற்கோவில், திருப்புன்கூர், ஆதமங்கலம், பெருமங்கலம், கொண்டல், வள்ளுவக்குடி, புங்கனூர், நிம்மேலி, சட்டநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் சம்பா சாகுபடி செய்திருந்தனர். இந்நிலையில் அறுவடைக்கு தயாராக இருந்த சம்பா நெற்பயிர்கள் கடந்த சில தினங்களுக்கு முன்பு பெய்த தொடர் மழையால் மழைநீரில் சாய்ந்து மழை நீர் வடிய வழியில்லாமல் நெற்கதிர்கள் முளைத்து வருகின்றன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து வருகின்றனர். இதேபோல் உளுந்து பயிறு உள்ளிட்ட பயிறு வகை செடிகள் தொடர் மழையால் பாதிக்கப்பட்டு அழுகி வருகிறது. நெல்லுக்கு ஈரப்பதத்தை உயர்த்தி விவசாயிகள் நெல்லை உடனுக்குடன் கொள்முதல் செய்ய வேண்டும் என தெரிவித்தனர்.

Next Story