சேந்தமங்கலம் அருகே நண்பரின் காதலியுடன் முகநூலில் பழகிய தொழிலாளியை தாக்கிய 3 பேர் கைது
சேந்தமங்கலம் அருகே நண்பரின் காதலியுடன் முகநூலில் பழகிய தொழிலாளியை தாக்கிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
சேந்தமங்கலம்:
சேந்தமங்கலம் அருகே நண்பரின் காதலியுடன் முகநூலில் பழகிய தொழிலாளியை தாக்கிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
நண்பரின் காதலியுடன் பழக்கம்
நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் ஒன்றியம் கல்குறிச்சி ஊராட்சியில் உள்ள வெள்ளாளப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 24). இவர் செல்போன் கோபுரம் அமைக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.
இவருடைய நண்பரான அதே பகுதியை சேர்ந்த லேத் பட்டறை தொழிலாளியான சுபாஷ் (24), முகநூல் பதிவு மூலம் சென்னையை சேர்ந்த ஒரு இளம்பெண்ணை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. அந்த பெண்ணுடன் சுபாஷுக்கு தெரியாமல் நண்பர் மணிகண்டனும் தொடர்பு கொண்டு பேசி வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த சில தினங்களாக சுபாஷிடம் முகநூலில் காதலி பேசுவதை தவிர்த்து விட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த சுபாஷ் ஏன்? தனது காதலி தன்னிடம் பேசுவதை தவிர்க்கிறார் என்று விசாரித்த போது, காதலியுடன் தனது நண்பரான மணிகண்டன் தொடர்பு கொண்டு பழகியதை தெரிந்து கொண்டார்.
மண்டை உடைந்தது
இதையடுத்து அவர் நண்பரிடம் தட்டிக்கேட்டதில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த சுபாஷ், நேற்று முன்தினம் அவரது நண்பர்களான லேத் பட்டறை தொழிலாளி வெங்கடேசன் (28), கட்டிட மேஸ்திரிகள் தினேஷ் (21) மற்றும் 18 வயது வாலிபர் ஆகியோருடன் சென்று மணிகண்டனிடம் தகராறில் ஈடுபட்டார். அப்போது திடீரென்று சுபாஷ் மண்வெட்டியை எடுத்து மணிகண்டனை தலையில் சரமாரியாக தாக்கினார். இதில் மணிகண்டன் மண்டை உடைந்து மயங்கி விழுந்தார். அவரது அலறல் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சேலத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
3 பேர் கைது
இந்த சம்பவம் குறித்து பேளுக்குறிச்சி போலீசில் மணிகண்டன் புகார் கொடுத்தார். அதன்பேரில் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து சுபாஷின் நண்பர்களான வெங்கடேசன், தினேஷ் மற்றும் 18 வயது வாலிபரை நேற்று முன்தினம் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள சுபாஷை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story