தேவையான வசதிகள் செய்து தராத தி.மு.க. அரசு மீது மக்களிடம் எதிர்ப்பு உள்ளது
தேவையான வசதிகள் செய்து தராத தி.மு.க. அரசு மீது மக்களிடம் எதிர்ப்பு உள்ளது என்று மயிலாடுதுறையில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை பேசினார்.
மயிலாடுதுறை:
தேவையான வசதிகள் செய்து தராத தி.மு.க. அரசு மீது மக்களிடம் எதிர்ப்பு உள்ளது என்று மயிலாடுதுறையில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை பேசினார்.
வேட்பாளர்கள் அறிமுக பொதுக் கூட்டம்
மயிலாடுதுறையில் மாவட்ட அளவில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் பா.ஜ.க. வேட்பாளர்கள் அறிமுக பொதுக் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம், மாநில செயலாளர் தங்க வரதராஜன், மாநில வழக்கறிஞர் பிரிவு தலைவர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தேசிய பொதுக்குழு உறுப்பினர் கோவி.சேதுராமன் வரவேற்று பேசினார். இதில் கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
தரமற்ற பொங்கல் தொகுப்பு
கடந்த 8 மாத காலத்தில் தி.மு.க. அரசு சந்திக்கிற தேர்தல் இது. ஊழல், சட்டம்-ஒழுங்கு சீர்கேடு, மக்களுக்கு தேவையான வசதிகள் செய்து தராதது என அனைத்திலும் தி.மு.க. அரசு மீது மக்களிடம் எதிர்ப்பு உள்ளது. போலீஸ்துறையை தி.மு.க. அரசு செயல்படவிடவில்லை.
பொங்கல் பரிசு தொகுப்பில் இடம்பெற்ற 21 பொருட்கள் தரமற்றதாக இருந்தது. அதேசமயம் இந்த 8 ஆண்டு காலத்தில் நரேந்திர மோடி அரசு சிறப்பாக செயல்பட்டுள்ளது. 172 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ்கள் தந்திருக்கிறோம். இதனால் மக்கள் தங்கள் வீட்டிற்கு அருகில் தடுப்பூசி போடும் நிலை வந்துவிட்டது. இது மிகப்பெரிய சாதனை.
அரசாணை வெளியிடவில்லை
தமிழகத்தில் 45 சதவீதம் மக்கள் ஓட்டு போடும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் இந்த வேளையில் பொது மக்களை நேரில் சந்தித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்யவில்லை. அவருக்கு வெளியே வந்து பிரசாரம் செய்ய பயம். பொதுமக்கள் பொங்கல் பரிசு ஊழல், நகைக்கடன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை பொதுமக்கள் கேட்பார்கள் என்ற அச்சம். உள்ளாட்சிகளுக்கு 85 சதவீதம் மத்திய அரசு நிதி வருகிறது.
அனைத்து மத்திய அரசு திட்டங்களும் உள்ளாட்சி வழியாகத்தான் செயல்படுத்தப்படுகிறது. உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. அரசுக்கு மக்கள் எச்சரிக்கை விடவேண்டும். ரூ.1000 பெண்களுக்கு வழங்குவதற்கு அரசாணை வெளியிடவில்லை. அதற்காக பட்ஜெட்டில் நிதி ஒதுக்கவில்லை. அப்புறம் எப்படி ரூ.1000 தரமுடியும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் நிர்வாகிகள் அகோரம், ஸ்ரீதர், ஈழவேந்தன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் நகர தலைவர் மோடி கண்ணன் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story