தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 16 Feb 2022 12:36 AM IST (Updated: 16 Feb 2022 12:36 AM IST)
t-max-icont-min-icon

தினத்தந்தி புகார் பெட்டி

ஏ.டி.எம்.மையத்துக்குள் தெரு நாய்கள் 

ஜோலார்பேட்டையை அடுத்த சந்தைக்கோடியூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஏ.டி.எம். மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்திற்குள் தெரு நாய்கள் வந்து உறங்குவதால் வாடிக்கையாளர்கள் ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுக்க முடியாமல் மிகவும் அவதிப்படுகின்றனர். குறிப்பாக பெண்கள் பணம் எடுக்க வரும்போது நாய்கள் உள்ளே தூங்கினால் அவர்கள் அச்சம் காரணமாக பணம் எடுக்காமலேயே திரும்பி சென்று விடுகிறார்கள். இதனால் ெதரு நாய்கள் ஏ.டி.எம.மையத்துக்குள் வருவதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  -செல்வன், ஜோலார்பேட்டை.
  

ஒலிபெருக்கிகளால் பயணிகள் அவதி

  செங்கம் புதிய பஸ் நிலையத்திற்கு நூற்றுக்கணக்கான பயணிகள் தினமும் வெளியூர் செல்வதற்காக வந்து பஸ்சுக்காக காத்திருக்கின்றனர். அப்போது பஸ் நிலையத்துக்குள் உள்ள ஒரு சில கடைகளின் முன்பு ஒலிபெருக்கிகளை வைத்து சினிமா பாடல்களை ஒலிக்க செய்கின்றனர். அதிக சத்தத்துடன் பாடல் ஒலிக்கப்படுவதால் பயணிகள் அங்கு அமரமுடியாத நிலை ஏற்படுகிறது. எனவே அதிக சத்தத்துடன் பாடல் ஒலிபரப்புவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  -கந்தன், செங்கம்.
  

தாமதமாக வரும் ஆவின் பால்

  தமிழக அரசு நிறுவனமான ஆவின் நுகர்வோர்களுக்கு அதிக அளவில் பால், தயிர் உள்ளிட்ட பொருட்களை வினியோகம் செய்து வருகிறது. காட்பாடி கல்புதூர் பகுதியில் அதிகாலை 6 மணியளவில் பால்வினியோகம் செய்யப்பட்டு வந்தது. ஆனால் தற்போது கடந்த 10 நாட்களுக்கும் மேலாக காலை 9 மணிக்கு பிறகே பால்வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. உரிய நேரத்தில் பால் கிடைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
  -பி.துரை, கல்புதூர்.
  

15 ஆண்டுகளாக திறக்கப்படாத ரேஷன் கடை 

  கந்திலி ஒன்றியம் வெங்களாபுரம், அருகே உள்ள சமத்துவபுரம் 2006-ம் ஆண்டு புதிய ரேஷன் கடை கட்டப்பட்டது. கடை கட்டப்பட்டு 15 ஆண்டுகளாகியும் இதுவரை புதிய ரேஷன்கடை கட்டிடம் திறக்கப்படாமலேயே உள்ளது. இதனால் சமூகவிரோதிகளின் கூடாராமாக மாறிவிட்டது. கடையை திறக்க வேண்டும் என பலமுறை கோரிக்கை வைத்தும் திறக்கப்படாததால் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் 2 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள வெங்களாபுரம் ரேஷன் கடைக்கு செல்லவேண்டி உள்ளது. எனவே பொதுமக்கள் நலன்கருதி புதிய ரேஷன் கடை கட்டிடத்தை திறக்க வேண்டும்.
  -கண்ணன், கந்திலி.
  

மின்விளக்கு எரியுமா? 

  ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு ஒன்றியம் முப்பதுவெட்டி கிராமத்தின் முக்கிய பகுதியில் உயர்கோபுர மின்விளக்கு அமைக்கப்பட்டுள்ளது. இதில் உள்ள மின்விளக்குகள் பல மாதங்களாக எரிவதில்லை. இதுகுறித்து பலமுறை புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் இரவில் இருள்சூழ்ந்து பொதுமக்கள் நடமாட அச்சப்படுகின்றனர். உனடியாக மின்விளக்கு எரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  -பா.சிவா, ஆற்காடு.
  

ரோட்டில் தேங்கும் கழிவுநீர்

  வேலூர் சத்துவாச்சாரி ரங்காபுரம் பகுதியில் உள்ள மாதாகோவில் அருகில் கழிவுநீர்கால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கழிவுநீர் செல்லமுடியாமல் ரோட்டில் தங்கி நிற்கிறது. இதன்வழியாக கனரக வாகனங்களும் செல்வதால் கழிவுநீர் தேங்கியுள்ள இடத்தில் பள்ளம் ஏற்பட்டு இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் விபத்தில் சிக்கும் நிலை உள்ளது. சுகாதாரா சீர்கேடும் ஏற்படுகிறது. எனவே ரோட்டில் கழிவுநீர் தேங்குவதை தடுக்க வேண்டும்.
  -அருண்குமார், ரங்காபுரம்.

Next Story