95 ஆண்டுகள் பழமை வாய்ந்த சுதர்சன சபா இடிப்பு
தஞ்சை பழைய பஸ் நிலையம் அருகே 95 ஆண்டுகள் பழமை வாய்ந்த சுதர்சன சபா இடித்து தரைமட்டமாக்கப்பட்டது.
தஞ்சாவூர்:-
தஞ்சை பழைய பஸ் நிலையம் அருகே 95 ஆண்டுகள் பழமை வாய்ந்த சுதர்சன சபா இடித்து தரைமட்டமாக்கப்பட்டது.
சுதர்சன சபா
தஞ்சை பழைய பஸ் நிலையம் அருகே மாநகராட்சிக்கு சொந்தமான சுதர்சன சபா உள்ளது. 40 ஆயிரத்து 793 சதுரஅடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ள இந்த சபா கடந்த 1927 ஆண்டு டிசம்பர் மாதம் 14-ந் தேதி திறக்கப்பட்டது.
இந்த சபா ஆண்டு வாடகை அடிப்படையில் 99 ஆண்டுகள் குத்தகைக்கு மாநகராட்சி நிர்வாகத்தால் வழங்கப்பட்டது. தொடக்கத்தில் ராமநாதன் செட்டியார் என்பவர் இந்த இடத்தை குத்தகைக்கு எடுத்தார். பின்னர் தி.மு.க. பிரமுகர் ஒருவர், குத்தகைக்கு இந்த சபாவை வாங்கி இருந்தார்.
உள்வாடகைக்கு விடப்பட்டது
ஒரு காலத்தில் நாடகம், இசை உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெறும் இடமாக இருந்தது. அண்ணா போன்ற தலைவர்கள் எல்லாம் இந்த சபாவுக்கு வந்திருந்தனர்.
ஆனால் காலப்போக்கில் இந்த சபாவில் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுவது குறைந்துவிட்டது. மேலும் சபா வளாகத்தில் குத்தகை விதிமுறையை மீறி மதுபான கூடம், பேக்கரி கடை, செல்போன் கடை, உணவகம் ஆகியவை கட்டப்பட்டு, உள்வாடகைக்கு விடப்பட்டிருந்தது.
சீல் வைப்பு
நகர ஊரமைப்பு சட்டம் 1971 விதிகளின்படி உரிய அனுமதி பெறாமல் கட்டப்பட்டு உள்வாடகைக்கு விடப்பட்டிருந்த உணவகம், மதுபான கூடம், பேக்கரி, செல்போன் கடை ஆகியவற்றை மாநகராட்சி அதிகாரிகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பூட்டி சீல் வைத்தனர்.
அதே போல், சுதர்சன சபா நிர்வாகம் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டி வரியினங்கள் செலுத்தாமல் இருந்ததால், ஆக்கிரமிப்பாளர்களை வெளியேற்றுதல் சட்டம் 1975 -ன் படி தனியார் ஆக்கிரமிப்பில் இருந்து கடந்த 1-ந் தேதி மாநகராட்சி சார்பில், இடத்தை கையகப்படுத்தி தண்டோரா போட்டு, இடம் கையகப்படுத்தியதற்கான நோட்டீஸ் ஒட்டப்பட்டது.
தரைமட்டம்
கையகப்படுத்திய இடத்தில் உள்ள பொருட்களை வெளியே எடுத்துக் கொள்ள ஒரு வார காலம் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் சுதர்சன சபா வளாகத்தில் அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டிடங்கள் இடித்து அகற்றப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக நேற்று சுதர்சன சபா கட்டிடம் பாழடைந்து இருந்ததாக கூறி, பொதுமக்களின் பாதுகாப்பை கருதி, அந்த கட்டிடத்தை பொக்லின் எந்திரம் மூலம் மாநகராட்சி அதிகாரிகள் இடித்து தரைமட்டமாக்கினர்.
இந்த பணியை கூடுதல் கலெக்டர் (வருவாய்) சுகபுத்ரா, மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் ஆகியோர் நேரில் பார்வையிட்டனர். அப்போது செயற்பொறியாளர் ஜெகதீசன், உதவி செயற்பொறியாளர் ராஜசேகரன், உதவி பொறியாளர் கார்த்திக் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர். இந்த இடத்தின் தற்போதைய மதிப்பு ரூ.100 கோடியாகும்.
Related Tags :
Next Story