வாக்குச்சாவடி அருகே 100 மீட்டர் தொலைவிற்குள் வாக்கு சேகரிக்க தடை


வாக்குச்சாவடி அருகே 100 மீட்டர் தொலைவிற்குள் வாக்கு சேகரிக்க தடை
x
தினத்தந்தி 16 Feb 2022 1:14 AM IST (Updated: 16 Feb 2022 1:14 AM IST)
t-max-icont-min-icon

வாக்குச்சாவடி அருகே 100 மீட்டர் தொலைவிற்குள் வாக்கு சேகரிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 19-ந் தேதி நடைபெற உள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் புதுக்கோட்டை, அறந்தாங்கி ஆகிய நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் அன்னவாசல், அரிமளம், ஆலங்குடி, கீரனூர், கீரமங்கலம், கறம்பக்குடி, இலுப்பூர், பொன்னமராவதி ஆகிய 8 பேரூராட்சிகளிலும் கவுன்சிலர் பதவிக்கான தேர்தலில் 902 பேர் போட்டியிடுகின்றனர். தேர்தலில் வாக்குப்பதிவுக்காக 280 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்குச்சாவடிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்துதல் உள்பட அடிப்படையான பணிகள் நடைபெற்று வருகிறது.
எல்லைக்கோடு
இந்தநிலையில் வாக்குச்சாவடி மையம் அருகே தேர்தல் ஆணைய அறிவுறுத்தலின்படி எல்லைக்கோடு வரையும் பணி நடைபெறுகிறது. 100 மீட்டர் தொலைவு, 200 மீட்டர் தொலைவு என எல்லை அளந்து வெள்ளை நிறத்தில் கோடு வரையப்பட்டு அதில் எண்ணால் 100 மீ, 200 மீ என எழுதப்படுகிறது. வாக்குப்பதிவு நாளன்று வாக்குச்சாவடிக்குள்ளும், வாக்குச்சாவடி பகுதியில் இருந்து 100 மீட்டர் தொலைவிற்குள்ளும் வாக்கு சேகரிப்பது தடை செய்யப்பட்டுள்ளது. 
மேலும் வாக்குச்சாவடியில் இருந்து 200 மீட்டர் தொலைவிற்குள் தேர்தல் அலுவலகங்கள் அமைக்கக்கூடாது. வாக்கு சேகரிப்பதில் வாக்காளர்களை நிர்ப்பந்தித்தல், அச்சுறுத்தல், மிரட்டுதல், வாக்காளர்களை வாக்குச்சாவடிக்குள செல்வதை தடுத்தல் போன்ற செயல்களில் யாரும் ஈடுபடக்கூடாது.
வாகன வசதி கூடாது
வேட்பாளர்கள் வாக்குச்சாவடிக்கு அருகே அறிவிப்பு எதையும் கையெழுத்திட்டோ அல்லது கையெழுத்திடாமலோ, அச்சடித்தோ, கையால் எழுதியோ வெளியிடக்கூடாது. தேர்தல் தினத்தில் வாக்காளர்களுக்கு உணவு அளித்தல், மது மற்றும் போதை பொருட்களை வழங்குதல் போன்ற செயல்களில் வேட்பாளர்கள் ஈடுபடக்கூடாது. மேலும் வாக்குச்சாவடிக்கு செல்வதற்காக வாக்காளர்களுக்கு வாகன வசதியை ஏற்படுத்த தரக்கூடாது என்பது உள்ளிட்ட அறிவுறுத்தல்களை தமிழ்நாடு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

Next Story