தஞ்சை வருவாய் கோட்டாட்சியர் அலுவலக பொருட்களை ஜப்தி செய்ய முயற்சி


தஞ்சை வருவாய் கோட்டாட்சியர் அலுவலக பொருட்களை ஜப்தி செய்ய முயற்சி
x
தினத்தந்தி 16 Feb 2022 1:19 AM IST (Updated: 16 Feb 2022 1:19 AM IST)
t-max-icont-min-icon

நீதிமன்றம் கட்ட கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கு இழப்பீடு வழங்கப்படாததால் தஞ்சை கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஜப்தி செய்ய வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 10 நாட்கள் கால அவகாசம் கேட்டதால் ஜப்தி நடவடிக்கை தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டது.

தஞ்சாவூர்:-

நீதிமன்றம் கட்ட கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கு இழப்பீடு வழங்கப்படாததால் தஞ்சை கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஜப்தி செய்ய வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 10 நாட்கள் கால அவகாசம் கேட்டதால் ஜப்தி நடவடிக்கை தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டது.

1 ஏக்கர் நிலம்

தஞ்சை மாவட்டம் திருவையாறு தாலுகா கல்யாணபுரம் 2-ம் சேத்தி செங்கமேடு கிராமத்தை சேர்ந்தவர் திரிசங்கு. திருவையாறில் இவருக்கு சொந்தமாக 1 ஏக்கர் நிலம் இருந்தது. திருவையாறில் புதிதாக கோர்ட்டு கட்டுவதற்காக இந்த 1 ஏக்கர் நிலம் வருவாய் துறையினரால் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு கையகப்படுத்தப்பட்டது.
அப்போது இந்த நிலத்துக்கு ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் இழப்பீடு வழங்க முடிவு செய்யப்பட்டது. ஆனால் இந்த தொகை போதுமானதாக இல்லை எனவும், கூடுதலாக இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் கூறி வருவாய்த் துறையினரிடம் திரிசங்கு முறையிட்டார். ஆனால் ரூ.1 லட்சத்து 50 ஆயிரத்திற்கு மேல் இழப்பீடு நிர்ணயிக்கப்படவில்லை. இதனால் தஞ்சை 2-வது கூடுதல் மாவட்ட அமர்வு கோர்ட்டில் கடந்த 1994-ம் ஆண்டு திரிசங்கு வழக்கு தொடர்ந்தார்.

இழப்பீடு

கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்த திரிசங்கு ஓய்வு பெற்று கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இந்த நிலையில் வழக்கை அவருடைய மகன்கள் பாண்டிய ராம நாராயணன், வெங்கடேசன் ஆகியோர் நடத்தி வந்தனர். இவர்கள் தரப்பில் கோர்ட்டில் வக்கீல் சிவக்குமார் ஆஜராகி வாதாடினார்.
இந்த வழக்கை விசாரித்த கோர்ட்டு, திரிசங்கு குடும்பத்துக்கு 12 சதவீத வட்டியுடன் ரூ.33 லட்சத்து 2 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என கடந்த 2018-ம் ஆண்டு உத்தரவிட்டது. ஆனால் 4 ஆண்டுகள் ஆகியும் இழப்பீடு தொகை வழங்கப்படாததால் தஞ்சை இரண்டாவது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

ஜப்தி செய்ய உத்தரவு

இந்த மனுவை விசாரித்த நீதிபதி மலர்விழி, தஞ்சை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஜப்தி நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்தார். அதன்படி வக்கீல் சிவக்குமார், அமீனா மோகன் மற்றும் திரிசங்கு குடும்பத்தினர் நேற்று காலை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்தனர்.
பின்னர் கோர்ட்டு உத்தரவு நகலை அதிகாரிகளிடம் காண்பித்து விட்டு அலுவலகத்தில் இருந்த கணினி, மின்விசிறி, ஜீப், பீரோ, மேசை உள்ளிட்ட பொருட்களை ஜப்தி செய்வதற்கான முயற்சியை தொடங்கினர். 

10 நாட்கள் கால அவகாசம்

உடனே வருவாய் கோட்டாட்சியர் ரஞ்சித், சம்பந்தப்பட்டவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தையின் முடிவில் இன்னும் 10 நாட்கள் கால அவகாசம் வழங்க வேண்டும். அந்த 10 நாட்களில் இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகளால் உறுதி அளிக்கப்பட்டது. 
அதன்பேரில் ஜப்தி நடவடிக்கை தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.

Next Story