“நல்லவர்களை மக்கள் தூக்கிப்பிடிக்க வேண்டும்”-கமல்ஹாசன் பேச்சு
ஊழல்வாதிகளை பதவியில் அமர்த்தியதால் தமிழகத்துக்கு சீரழிவு ஏற்பட்டுள்ளது என்றும் நல்லவர்களை மக்கள் தூக்கிப்பிடிக்க வேண்டும் எனவும் மதுரை பிரசாரத்தில் கமல்ஹாசன் பேசினார்.
மதுரை
ஊழல்வாதிகளை பதவியில் அமர்த்தியதால் தமிழகத்துக்கு சீரழிவு ஏற்பட்டுள்ளது என்றும் நல்லவர்களை மக்கள் தூக்கிப்பிடிக்க வேண்டும் எனவும் மதுரை பிரசாரத்தில் கமல்ஹாசன் பேசினார்.
மதுரை பிரசாரம்
மதுரை மாநகராட்சி தேர்தலில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் நேற்று தீவிர பிரசாரம் செய்தார். இதற்காக தனி விமானம் மூலம் அவர் மதுரை வந்தார்.
மாலை 5 மணி அளவில் திருப்பரங்குன்றம் பகுதியில் தனது பிரசாரத்தை தொடங்கினார். அவனியாபுரம், ஜெய்ஹிந்த்புரம், பெரியார் பஸ் நிலையம் ஆகிய இடங்களில் பொதுமக்கள் மத்தியில் பிரசார வாகனத்தில் நின்றபடி கமல்ஹாசன் பேசியதாவது:-
ஆட்சி அதிகாரம்
ஒரு மாற்றத்திற்கான வாய்ப்புக்காக உங்கள் முன்பு மக்கள் நீதி மய்யம் நிற்கிறது. மக்களின் சேவகர்கள் தேர்தலில் நிற்கிறார்கள். தெருவில் உங்கள் குழந்தைகள் ஆரோக்கியமாக, ஆபத்தில்லாமல் விளையாடவும், வளரவும் வேண்டும் என்றால் மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும். ஆட்சி அதிகாரத்தில் எங்கள் வேட்பாளர்கள் பொறுப்பேற்க வேண்டும்.
வருடத்திற்கு மதுரை நகரத்திற்கு ரூ.586 கோடி செலவாகிறது. அந்த பணத்தை மக்களின் வளர்ச்சிக்காக செலவிட வாய்ப்பு அளிக்க வேண்டும். கடந்த காலங்களில் தெருவில் வளர்ந்த குழந்தைகள் எந்தவித ஆபத்தும், நோயும் இல்லாமல் வளர்ந்தனர். அந்த குழந்தைகளில் நானும் ஒருவன். ஆனால், இன்று அப்படி குழந்தைகளை விட முடியாது.
காரணம், சுகாதாரம் பாதுகாக்கப்படவில்லை. வருடத்திற்கு ரூ.586 கோடி செலவிடுவதாக கூறுகிறார்கள். அதற்கான சாயல் எங்காவது தெரிகிறதா?. முன்பு குடிக்க தண்ணீர் இருந்தது. ஆனால், தற்போது, சாக்கடை அனைத்து தெருக்களிலும் ஓடிக்கொண்டிருக்கிறது.
மக்கள் கேள்வி
இலவசமாக கிடைக்க வேண்டிய தண்ணீரை காசு கொடுத்து வாங்குகிறோம். ஆனால் ஆட்சியாளர்கள் அனைத்து இடங்களிலும் கழிவுநீரை இலவசமாக ஓட விட்டிருக்கிறார்கள். சாக்கடையை கூட சரிசெய்ய முடியாதா? இந்த கேள்வியை கூட மக்கள் இதுவரை கேட்காமல் இருந்திருக்கிறீர்கள்.
அதிகாரம் மக்கள் கையில் இருக்கிறது என்பதை ஞாபகப்படுத்த வந்த கட்சிதான் மக்கள் நீதி மய்யம். கிராம சபை என்பதை கமல்ஹாசன் கண்டுபிடிக்கவில்லை. 25 வருடத்திற்கு முன்பே இந்த சட்டம் இயற்றப்பட்டுள்ளது. ஆனால், அதனை மக்களுக்கு சென்றடைய விடாமல் தடுத்துவிட்டனர். அதனை மக்கள் நீதி மய்யம் தூசி தட்டி மக்களுக்கு அறிமுகம் செய்து வைத்தது.
வார்டுக்கு எவ்வளவு பணம் வந்தது, எதற்கு எல்லால் செலவிடப்பட்டது, என்பதை எங்கள் வேட்பாளர்கள் பகிரங்கமாக அறிவிப்பார்கள். மாடியில் ஏறி நின்று கூவி, கூவி மக்களிடம் செலவு கணக்குகளை எடுத்துரைப்பார்கள். இதையெல்லாம் செய்வேன் என்றவர்களுக்கு மட்டுமே தேர்தல் களத்தில் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
நல்லவர்களை...
ஆட்சி செய்தவர்கள், பொய் வாக்குறுதிகளை கொடுத்து மக்களை ஏமாற்றினார்கள். அரசியலை வியாபாரமாக செய்கிறார்கள். மக்கள் எதிர்பார்க்கும் மாற்றம் விரைவில் வரும்.
உங்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி விடுவோம். மக்களுக்கு நாங்கள் அளிக்கும் வாக்குறுதிகள் அனைத்தையும் போராடியாவது நிறைவேற்றுவோம்.
மக்களும் நல்லவர்களை தூக்கிப்பிடிக்க வேண்டும். இல்லாவிட்டால் எல்லா விஷயத்திற்கும் லஞ்சம் கொடுக்க வேண்டிய நிலை உருவாகிவிடும். கொள்ளையடிப்பவர்களை, ஊழல் செய்பவர்களை மக்கள் பதவியில் அமர்த்தியதன் காரணமாகத்தான் தமிழகம் இப்படி சீரழிந்துள்ளது. மாற்றத்திற்கான ஏற்பாடுகளை மக்களே செய்ய வேண்டும். அது மக்கள் கையில்தான் உள்ளது.
அரசியல் வியாபாரம்
ஜனநாயகத்தை மக்கள் கையில் எடுத்துக்கொள்ள வேண்டும். அதற்கான பலமான ஒரு ஆயுதம்தான் ஓட்டு. அதனை பண்டமாற்று, வியாபாரத்திற்கு பயன்படுத்தி விட வேண்டாம். மற்ற கட்சியினர் கொடுக்கும் ரூ.5 ஆயிரம், ரூ.10 ஆயிரம், எதுவாக இருந்தாலும் பத்தாது.
ரூ.1 கோடி செலவு செய்து கவுன்சிலர் ஆகிறவர், பதவிக்கு வந்தபின் ரூ.1 கோடியை எடுக்காமல் விடுவாரா?. அதனால், பணம் கொடுப்பவர்களுக்கு வாக்களிக்க வேண்டாம். எங்களுக்கு ஓட்டு போடாவிட்டால் கூட பரவாயில்லை. பணம் கொடுப்பவர்களுக்கு ஓட்டு போடாதீர்கள். மக்கள் பணம் ஏராளமாக இருக்கிறது. ஆனால், அது திருடர்கள் கையில் கொட்டிக்கிடக்கிறது.
இந்த காட்சிகள் எல்லாம் மாற வேண்டும். நாளை நமதே.
இவ்வாறு அவர் பேசினார்.
இதனை தொடர்ந்து அவர், அரசரடி, பெத்தானியாபுரம், ஆனையூர், ஆரப்பாளையம், சிம்மக்கல், அண்ணாநகர், வண்டியூர், ஓபுளாபடித்துறை, தெற்கு மாசி வீதி, பைகாரா உள்ளிட்ட இடங்களில் பிரசார வாகனத்தில் நின்றபடி மக்களிடம் ஆதரவு கேட்டு பேசினார். பிரசாரத்தை முடித்து விட்டு மதுரையில் இரவு தங்கினார். இன்று அவர் கோவை புறப்பட்டு செல்கிறார்.
பேட்டி
முன்னதாக அவர் மதுரை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறுகையில், 25 ஆண்டுகளாக மக்களுக்கு தெரியாத விஷயத்தை மக்களுக்கு டார்ச் லைட் அடித்து மக்கள் நீதி மய்யம் காட்டியுள்ளது. இன்னும் 25 ஆண்டுகள் கடந்தால் சுதந்திரம் அடைந்து 100 ஆண்டுகள் ஆகிவிடும். ஆனால் இன்னும் குடிநீர் முழுமையாக கிடைக்கவில்லை. இந்தியாவில் ஒவ்வொரு கிராமங்களும் மாற வேண்டும். மக்கள் மாற்றங்களின் பேச்சாளர்களாக இல்லாமல் போராளிகளாக மாற வேண்டும். இதற்காக மக்களின் குரல் ஓங்க வேண்டும். நடுநிலையாளர்களாக மக்கள் மாற வேண்டும்.
அரசியல் களத்தில் மக்கள் நீதி மய்யத்திற்கு வயது, முன் அனுபவமின்மை உள்ளிட்டவை இடையூறாக இருந்தது. அந்த அனுபவங்கள் தற்போது அதிகரித்துள்ளது. மக்களின் ஆதரவு முன்பைவிட தற்போது அதிகரித்துள்ளது. இன்றும் மாற்றத்திற்காக நாங்கள் முன்வருவது போல் மக்களும் ஒரு அடி முன் வைக்க வேண்டும். இவ்வாறு கமல்ஹாசன் கூறினார்.
Related Tags :
Next Story