தமிழகத்தில் தி.மு.க. இருக்கும் வரை பா.ஜனதா ஆட்சிக்கு வர முடியாது-உதயநிதி ஸ்டாலின் பேச்சு


தமிழகத்தில் தி.மு.க. இருக்கும் வரை  பா.ஜனதா ஆட்சிக்கு வர முடியாது-உதயநிதி ஸ்டாலின் பேச்சு
x
தினத்தந்தி 16 Feb 2022 2:09 AM IST (Updated: 16 Feb 2022 2:09 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் தி.மு.க. இருக்கும் வரை பா.ஜனதா ஆட்சிக்கு வர முடியாது என்று உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

மதுரை
தமிழகத்தில் தி.மு.க. இருக்கும் வரை பா.ஜனதா ஆட்சிக்கு வர முடியாது என்று உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
பிரசார பொதுக்கூட்டம்
மதுரை மாநகராட்சி 100 வார்டுகளில் போட்டியிடும் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசார பொதுக்கூட்டம் ஒபுளாபடித்துறை, ஆனையூரில் நேற்று நடந்தது. அமைச்சர் மூர்த்தி தலைமை தாங்கினார். 
மாவட்ட செயலாளர்கள் கோ.தளபதி எம்.எல்.ஏ., பொன்.முத்துராமலிங்கம், மணிமாறன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தி.மு.க. இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசியதாவது:-
கடந்த 8 நாட்களாக தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்து வருகிறேன். மக்களை சந்தித்து ஆதரவு கேட்டு வருகிறேன். செல்லும் இடங்களில் எல்லாம் மக்கள் எழுச்சியை காணமுடிகிறது. அன்பையும், ஆதரவையும் தி.மு.க.விற்கு தருகிறார்கள். 
கடந்த சட்டமன்ற தேர்தலை போன்று இந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் மக்கள் தங்களது ஆதரவை தருவார்கள். மதுரையில் நீங்கள் அளித்த வரவேற்பு வெற்றியை உறுதி செய்துள்ளது. பொதுமக்கள் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை மாநகராட்சிக்கு அனுப்ப தயாராகி விட்டார்கள். உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றால் மட்டுமே நல்லாட்சி தர முடியும். எனவே உங்களுக்காக உழைக்க தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு நீங்கள் வாக்களிக்க வேண்டும்.
தடுப்பூசி
உள்ளாட்சி தேர்தலில் ஆண்களை விட பெண்கள் தி.மு.க.விற்கு அதிக ஆதரவு தருகிறார்கள், தாய்மார்கள் முடிவெடுத்தால் மாறமாட்டார்கள். எனவே தி.மு.க.வின் வெற்றி உறுதியாகிவிட்டது என்று சொல்கிறேன்.
தி.மு.க. ஆட்சிக்கு வந்து 8 மாதங்கள்தான் ஆகிறது. தி.மு.க. ஆட்சிக்கு வந்தபோது கொரோனா 2-ம் அலை மிக வேகமாக பரவிக்கொண்டு இருந்தது. முதல்-அமைச்சர் எடுத்த நடவடிக்கையால் கொரோனா கட்டுப்படுத்தப்பட்டது.
அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் கொரோனா தடுப்பூசியை வீணாக்கி விட்டார்கள். அ.தி.மு.க. ஆட்சியில் ஒரு ஆண்டில் 1 கோடி பேருக்குதான் தடுப்பூசி போடப்பட்டது. ஆனால் தி.மு.க. ஆட்சியில் இதுவரை 10 கோடி தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கொரோனா வார்டுக்குள் சென்று ஆய்வு செய்த ஒரே முதல்-அமைச்சர், தமிழக முதல்-அமைச்சர்தான். அவர் கொடுத்த தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றுவார். கொரோனா நிவாரணத்தொகை ரூ.4 ஆயிரம் வழங்கப்பட்டு உள்ளது. பெண்களுக்கு இலவச பஸ் வசதி, ஆவின் பால் விலை குறைக்கப்பட்டுள்ளது. அதனையெல்லாம் மக்களிடம் போய் கட்சியினர் எடுத்துச்சொல்ல வேண்டும். இல்லையென்றால் மக்கள் மறந்து விடுவார்கள்.
இலவச மருத்துவம்
மகளிர் உரிமைத்தொகை ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் அறிவித்துள்ளார். இல்லம் தேடி கல்வி திட்டம், மக்களை தேடி மருத்துவம் போன்ற திட்டங்களை நிறைவேற்றி இருக்கிறோம். கூட்டுறவு நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது. அதில் நிறைய பேருக்கு தள்ளுபடி கிடைத்து இருக்காது. எனக்கு தெரியும். அவர்களுக்கு படிப்படியாக அது கிடைக்கும். இந்தியாவிற்கே முன்னோடி திட்டமாக, விபத்தில் சிக்குவோருக்கு முதல் 48 மணி நேரங்களில் இலவச மருத்துவம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, தமிழக சட்டசபையை முடக்கி விடுவேன் என்று கூறுகிறார்.. நான் அவரை விட வயதில் சிறியவனாக இருந்தாலும், அவருக்கு ஒரு சவால் விடுகிறேன். உங்களால் முடிந்தால் தமிழக சட்டசபையை முடக்கி காட்டுங்கள் பார்ப்போம். நீங்கள் முடக்கி வைத்து விட்டு மீண்டும் தேர்தல் நடத்தினால் தி.மு.க. 200 இடங்களில் வெற்றி பெறும். இதுபோன்று எடப்பாடி பழனிசாமி பேசுவதற்கு காரணம் அவருக்கு பின்னால் இருக்கும் பிரதமர் மோடிதான். நான் மக்களிடம் கேட்கிறேன், மோடி எங்கள் டாடி என்ற அ.தி.மு.க. வேண்டுமா? அல்லது மக்கள் உரிமைகளை கேட்டு போராடும் தி.மு.க. வேண்டுமா?.
புதிய திட்டங்கள்
நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி பேசிய போது, தமிழகத்தில் தி.மு.க. இருக்கும் வரை பா.ஜனதா. ஆட்சிக்கு வரமுடியாது என்று சவால் விடுத்துள்ளார். தி.மு.க. இருக்கும் வரை பா.ஜனதா கட்சி தமிழகத்தில் கால் வைக்க முடியாது. அந்த அளவுக்கு பா.ஜனதாவிற்கு சிம்ம சொப்பனமாக மு.க.ஸ்டாலின் விளங்குகிறார். 
எடப்பாடி பழனிசாமி போகிற இடத்தில் எல்லாம் என்னை பற்றி பேசுகிறார். அவர் உதயநிதி ஸ்டாலின் பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து விட்டு தற்போது காணாமல் போய் விட்டதாக கூறுகிறார். நான் தினமும் மக்களை சந்தித்து கொண்டு இருக்கிறேன்.
மதுரை மாவட்டத்தில் ரூ.120 கோடி செலவில் கலைஞர் நூலகம் கட்டுமானப்பணி நடந்து வருகிறது. ரூ.50 கோடி செலவில் நகரில் உள்ள சந்தைகள் புறநகருக்கு மாற்றப்படும். மாநகராட்சியுடன் இணைந்த விரிவாக்க பகுதிகளுக்கு பாதாள சாக்கடை திட்டம் கொண்டு வரப்படும். மதுரை மாநகருக்கு மட்டும் ரூ.500 கோடியில் புதிய திட்டங்கள் கொண்டு வந்து இருக்கிறோம். மதுரை புறநகரில் 40 ஏக்கர் நிலப்பரப்பில் புதிய சிறைச்சாலை அமைக்கப்படும். தேர்தலுக்கு இன்னும் ஒரு சில நாட்கள் மட்டுமே உள்ளன. எனவே நீங்கள் அனைவரும் தி.மு.க.விற்கு வாக்களிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.

Next Story